சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், காசி தமிழ் சங்கமம் 4.0க்கான இரண்டாவது குழு பிரதிநிதிகள் மற்றும் கலைஞர்களின் சுமுகமான புறப்பாட்டிற்கு நேற்று ஏற்பாடு செய்தது. 264 பங்கேற்பாளர்கள் (216 பிரதிநிதிகள் மற்றும் தெற்கு மண்டல கலாச்சார மையத்தைச் சேர்ந்த 48 கலைஞர்கள்) சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரயில் எண்.06003 (சென்னை சென்ட்ரல் – பனாரஸ்) மூலம் புறப்பட்டனர். இந்த குழுவின் புறப்பாடு, வாரணாசி, நமோ காட்டில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 4.0ன் தொடக்க விழாவோடு ஒத்துப்போகிறது.
இந்த ஆண்டுக்கான மையக்கருத்து, ‘தமிழ்க் கற்கலாம்’ என்பதாகும். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், விவசாயிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என தமிழ்நாட்டிலிருந்து 1400க்கும் மேற்பட்டோர் காசியில் கலாச்சார, கல்வி மற்றும் அறிவுப் பரிமாற்ற நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளனர். பங்கேற்பாளர்களின் பயணத்திற்கு உதவ, தெற்கு ரயில்வே, ஐ.ஐ.டி மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைந்து ஏழு சிறப்பு ரயில் சேவைகளை இயக்குகிறது. அதன்படி சென்னை சென்ட்ரல் -பனாரஸ் 3 சேவைகள், கன்னியாகுமரி – பனாரஸ் 2 சேவைகள் மற்றும் கோவை -பனாரஸ் இடையே 2 சேவைகள் இயக்குகிறது. பிரதிநிதிகளின் முதல் குழு 2025 நவம்பர் 29ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பாதுகாப்பான, வசதியான பயண வசதிகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது.
