×

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலி கலெக்டர், ஐஜி, எஸ்பியிடம் உச்சநீதிமன்ற குழு விசாரணை: 3 மணி நேரம் நடந்தது

கரூர்: விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் கலெக்டர், ஐஜி, எஸ்பியிடம் 3 மணி நேரம் உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்தியது. கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரி பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அடுத்த கட்டமாக கண்காணிப்பு குழுவில் இடம்பெற்றுள்ள டிஐஜி அதுல் குமார் தாக்கூர் நேற்றுமுன்தினம் கரூர் வந்தார். விசாரணை குறித்து சிபிஐ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் சென்றும் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்ற மேற்பார்வை குழுவின் தலைவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமயில் ஏடிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் நேற்று காலை 10 மணியளவில் கரூர் சிபிஐ விசாரணை அலுவலகம் வந்தனர். இவர்களுடன் சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாக்கூரும் வந்தார். பிற்பகல் 12 மணியளவில் சிபிஐ விசாரணை அலுவலகத்தில் கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஆஜராகி, சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அவரிடம் குழுவினர், சம்பவத்தின் பின்னணி, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்ட மேலாண்மை குறைபாடுகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக கேட்டறிந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விரிவான விளக்கங்கள் அளித்த கலெக்டர், 3 மணியளவில் விசாரணை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

கலெக்டரை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐஜி ஜோஷி நிர்மல்குமார், கரூர் எஸ்பி ஜோஸ் தங்கையா, டிஎஸ்பி செல்வராஜ் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகி குழுவிடம் விளக்கம் அளித்தனர். அவர்களிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் 6 மணியளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களிடம் உச்சநீதிமன்ற குழு விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் மீது பல்வேறு அமைப்பினர் குற்றம் சாட்டி மனு அளித்துள்ளதால் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* விஜய் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி மனு
41 பேர் பலி சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் மனுக்கள் அளிக்க விரும்பினால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ விசாரணை அலுவலகத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வை குழுவினரிடம் அளிக்கலாம் என்று கலெக்டர் தங்கவேல் அறிவித்திருந்தார். அதன்படி கூட்ட நெரிசலில் உயிரிழந்த பழனியம்மாள், கோகிலா ஆகியோரின் பெற்றோர் பெருமாள், செல்வராணி ஆகியோர் கண்காணிப்பு குழுவிடம் மனு அளித்தனர். இவர்களை தொடர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட செயலாளர் அருள் தலைமையிலான நிர்வாகிகள், கண்காணிப்பு குழுவினரிடம் அளித்துள்ள மனுவில், பாதுகாப்பு விதிகளும், காவல்துறை மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களும் மதிக்கப்படாததே உயிர் பலிக்கு காரணம். இதற்கு விஜய் மற்றும் அவரது கட்சி பொறுப்பாளர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர்தான் பொறுப்பு. சம்பவம் நடைபெற்ற பின் 01.10.2025 அன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பான விஜய் மற்றும் அவரது கட்சி பொறுப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பசுவை பாரதி தலைமையிலான நிர்வாகிகள், உச்சநீதிமன்ற குழுவிடம் அளித்துள்ள மனுவில், விஜய் பிரசாரத்தின் போது 63 டிரோன் கேமராக்கள் மூலம் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. விஜய் தாமதமாக வந்த காரணத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் விஜய் வருவது 12.30 மணிக்கு என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் விஜய் 6 மணி நேரம் தாமத வருகையால் குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் பட்டியலின மக்கள். இதற்கு காரணமான தவெக தலைவர் விஜய் மீது கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Tags : Karur ,Vijay ,Supreme Court ,Collector ,IG ,SP ,
× RELATED மகளிர் சுய உதவிக் குழுக்கள்...