×

சொத்து தகராறில் மோதல்; ‘லிவ்-இன்’ காதலியை கொன்ற கள்ளக்காதலன்: போதையில் கார் ஓட்ட முடியாமல் சிக்கிய விநோதம்

புதுடெல்லி: டெல்லியில் சொத்து தகராறு காரணமாக உடன் வசித்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை காரில் மறைக்க முயன்ற நபர், போதை அதிகமானதால் மாட்டிக்கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் தென்மேற்குப் பகுதியான சாவ்லாவில் வீரேந்திரா என்பவர் 44 வயதுடைய பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ‘லிவ்-இன்’ காதலியான அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான வீட்டை விற்ற பணத்தில், வீரேந்திரா தனது பெயரில் வேறு சொத்து வாங்கியதுடன், மீதமுள்ள 21 லட்சம் ரூபாயையும் தானே வைத்துக்கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 25ம் தேதி இரவு இருவரும் மது அருந்தியபோது பணப்பிரச்னை குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரேந்திரா, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

கொலையை மறைப்பதற்காக வீரேந்திரா தனது மனைவி பூனம் மற்றும் மைத்துனர் சேத்தன் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து சடலத்தை காரில் ஏற்றினர். ஆனால், வீரேந்திரா அதிக போதையில் இருந்ததால் காரை 100 மீட்டர் தூரம் கூட ஓட்ட முடியாமல் நடுரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்று நிம்மதியாகத் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் காரில் சடலம் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், காரில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீரேந்திராவைக் கைது செய்தனர். விசாரணையில், பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்த மனைவி மற்றும் மைத்துனர் உதவினார்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : New Delhi ,Delhi ,Virendra ,Chawla, southwest Delhi ,
× RELATED நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி...