பிரஸல்ஸ்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி மெகுல் சோக்சி. இவர், தனது சகோதரர் மகன் நிரவ் மோடியுடன் இணைந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் மோசடியில் சிக்கினார். இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் மெகுல் சோக்சி, கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவாவுக்கு தப்பினார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், புற்றுநோய் சிகிச்சைக்காக இந்தாண்டு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்துக்கு சென்றார்.
இந்திய அரசு சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்று அவரை ஏப்ரல் மாதம் பெல்ஜியம் போலீசார் கைது செய்தனர். அவரை நாடு கடத்த அக்டோபரில் பெல்ஜியம் உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இதை எதிர்த்து மெகுல் சோக்சி, பெல்ஜியம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை கடந்த 9ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தும் பணிகள் தொடங்கின. அவர் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
