×

சஞ்சார் சாத்தி: செல்போன்களில் புதிய செயலி கட்டாயம்; ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும், இறக்குமதி செய்யப்படும் புதிய செல்போன்களில் சஞ்சார் சாத்தி என்ற செயலியை பதிவிடும்படி அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள மொபைல் போன்களில் 15 இலக்க ஐஎம்இஐ எண் உட்பட தொலைத்தொடர்பு அடையாளங்காட்டிகளை சேதப்படுத்துவது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்கள் என்று அறிவித்த ஒன்றிய அரசு, ஐஎம்இஐ எண்ணை சேதப்படுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தது.

இதை தொடர்ந்து செல்போன்களை வைத்து மோசடி செய்வதை தடுக்க சஞ்சார் சாத்தி என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பயனர்கள் சர்வதேச மொபைல் உபகரண அடையாள எண் (ஐஎம்இஐ) தொடர்பான சந்தேகத்திற்கிடமான தவறான பயன்பாட்டைப் புகாரளிக்கவும், மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஐஎம்இஐ எண்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் உதவுகிறது. தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் இந்த சஞ்சார் சாத்தி என்ற புதிய செயலி கட்டாயம் என்று ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நவ.28ஆம் தேதி அனைத்து செல்போன் உற்பத்தியாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து செல்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகு இறக்குமதி செய்யப்படும் அனைத்து மொபைல் போன்களும் இந்த செயலியை வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு விற்பனையில் உள்ள அனைத்து சாதனங்களுக்கும், மொபைல் போன் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் இந்த செயலியை மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் செயல்படுத்த வேண்டும்.

இந்தியாவில் பயன்படுத்த விரும்பும் அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும் இந்த உத்தரவுகள் வெளியிடப்பட்ட 120 நாட்களுக்குள் இதுதொடர்பான சம்மத அறிக்கைகளை தொலைத்தொடர்புத்துறை வசம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவை கடைபிடிக்க செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தவறினால், தொலைத்தொடர்புச் சட்டம் 2023, தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2024 மற்றும் பிற பயன்பாட்டுச் சட்டங்களின் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்தியாவில் தற்போது அனைத்து முக்கிய மொபைல் போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங், கூகுள், விவோ, ஓப்போ, ஜியோமி போன்றவை செல்போன் உற்பத்தி செய்கின்றன.
* கடந்த வாரம் வாட்ஸ்அப், சிக்னல், டெலிகிராம் மற்றும் பிற போன்ற செயலி அடிப்படையிலான தொடர்பு சேவைகள் பயனரின் செயலில் உள்ள சிம் கார்டுடன் தொடர்ந்து இணைக்கப்படுவதை உறுதி செய்யும் வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு வெளியிட்டது.
* 90 நாட்களுக்குள், செயலியின் எந்தவொரு வலைப் பதிப்பும் குறைந்தபட்சம் 6 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது பயனர்களை தானாகவே வெளியேற்ற வேண்டும். அதன் பின்னர் பயனர்கள் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி செல்போனை மீண்டும் இணைப்பதன் மூலம் மீண்டும் உள்நுழையலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Tags : Union government ,New Delhi ,India ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...