புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, நாடாளுமன்றம் நாடகம் நடத்துவதற்கான இடமில்லை. அது பேச்சுவார்த்தைக்கான இடம் என்று கூறி எதிர்க்கட்சிகளை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் தள பதிவில், ‘‘பாஜ இப்போது இந்த கவனச்சிதறல் நாடகத்தை நிறுத்திவிட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் ஈடுபட வேண்டும்.
உண்மை என்னவென்றால் வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார சமத்துவமின்மை மற்றும் நாட்டின் விலைமதிப்பற்ற வளங்களை சூறையாடுதல் ஆகியவற்றால் தத்தளித்து வருகின்றனர். அதே நேரத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தின் ஆணவத்தில் நாடக விளையாட்டை நடத்துகின்றனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் குறைந்தது 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. சில மசோதாக்களில் விவாதங்கள் இன்றி 15 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிச்சுமை காரணமாக வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் தொடர்ந்து உயிர் இழந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் வாக்கு திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகின்றது. நாங்கள் தொடர்ந்து அந்த பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்\\” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,\\” பிரதமர் மோடி ஒருபோதும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை. அவர் அதனை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறார். எதிர்க்கட்சிகளுடன் விவாதத்தில் ஈடுபடுவதில்லை. ஆனால் கூட்டத்தொடருக்கு முன் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை கேட்டு நாட்டிடம் பெருமையாக பேசுவார். நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பு பிரதமரின் அறிக்கை பாசாங்குதனத்தை தவிர வேறில்லை. அவற்றில் மிகப்பெரிய நாடகம் நாடகத்தை பற்றி பேசுவதாகும்\\” என்று தெரிவித்துள்ளார்.
