×

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாட அனுமதி: நூற்றாண்டு கால பிரச்னையில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கி 2022ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோவில் உதவி ஆணையர், கடந்த 2022ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும் அமர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

மேலும், முதலில் தென்கலை பிரிவினர் ஸ்ரீ சைல தயாபத்ரம் படிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் படிக்கவும், பின்னர் இரு பிரிவினரும் இணைந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடவும் அனுமதித்த உயர் நீதிமன்றம், இறுதியாக தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாழி திருநாமமும் பாட அனுமதித்தும் 2022 மே மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும் தென்கலை பிரிவினர் மேல் முறையீடு செய்திருந்தனர். அதேபோல, வடகலை பிரிவினர் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கக் கோரியும் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த 1915ம் ஆண்டு தென்கலை பிரிவினருக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை அவமதித்ததாகக் கூறி, கோவில் உதவி ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, 200 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் வடகலை, தென்கலை பிரச்னையில், வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கு என தனிப்பட்ட உரிமை வழங்கி 1915, 1969ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. எனவே, வடகலை பிரிவினரையும் பிரபந்தம் பாட அனுமதித்து 2022ம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கடந்த 1915 மற்றும் 1969 ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கோயில் உதவி ஆணையர் அமல்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் காவல்துறை உதவியை கோரலாம் என்று உத்தரவிட்டனர்.

Tags : Southern Kalai ,Kanchipuram Varadaraja Perumal Temple ,Chennai ,Madras High Court ,Northern Kalai ,Kanchipuram ,Varadaraja Perumal… ,
× RELATED ஒரே முகச்சாயல் என பதிவேற்றம் செய்ய...