புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் எம்பி ரேணுகா சவுத்ரி நாய்க்குட்டியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்பியின் இந்த செயலுக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு காரில் வந்த காங்கிரஸ் கட்சியின் எம்பி ரேணுகா சவுத்ரியின் காரில் முன் இருக்கையில் நாய்க்குட்டி ஒன்று இருந்தது. அவர் காரில் இருந்து இறங்கிக்கொண்ட பின் அந்த காரிலேயே நாய்க்குட்டியை அனுப்பிவைத்தார். இந்த செயல் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக எம்பி ரேணுகா சவுத்ரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது எம்பி ரேணுகா,‘‘முந்தைய நாள் தெருவில் இருந்து இந்த நாயை மீட்டேன். கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்றேன். அரசிற்கு விலங்குகள் என்றால் பிடிக்காது. விலங்குகளுக்கு குரல் இல்லை. நாய்க்குட்டி காரில் இருந்தது. அதனால் அவர்களுக்கு என்ன பிரச்னை? அது மிகவும் சிறியது. அது கடிப்பது போல் இருக்கிறதா? நாடாளுமன்றத்திற்குள் அமர்ந்திருப்பவர்கள் தான் கடிக்கிறார்கள். நாய்கள் அல்ல. நான் நாயை மீட்க கூடாது என்று எந்த சட்டம் கூறுகின்றது?” என்றார்.
நாய் பிரியரான ரேணுகா சவுத்ரி, வீட்டில் சில செல்லப்பிராணிகளை வைத்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் எம்பியை இறக்கிவிட்ட பின்னர் அதனை கால்நடை மருத்துவமனைக்கு கார் ஓட்டுனர் அழைத்துச்சென்றதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ரேணுகா சவுத்ரியின் இந்த செயலை பாஜ ஏற்றுக்கொள்ளவில்லை. இது நாடகம், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். பாஜ எம்பி ஜகதாம்பிகா பால் சவுத்ரி இது குறித்து கூறுகையில்,‘‘காங்கிரஸ் எம்பி நாடாளுமன்றத்துக்கு நாயை கொண்டு வந்ததன் மூலமாக நெறிமுறைகளை மீறி விட்டார். பிரச்னைகளை விவாதிப்பதில் நீங்கள் தீவிரமாக இல்லை. நாடாளுமன்றத்தை கேலி செய்கிறீர்கள். அவர் நாடாளுமன்ற உறுப்பினர். இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுவதற்கு பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்ப வேண்டும். அவர் மீது அவை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
