பாட்னா: பீகார் சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் -பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகர் நரேந்திர நாராயணன் யாதவ் அவர்களுக்கு பதவி ப்பிரமாணம் செய்து வைத்தார்.
தாராபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி முதலில் பதவியேற்றார். 4 வது முறையாக லக்கிசாராய் தொகுதியை தக்க வைத்துக்கொண்ட துணை முதல்வர் விஜய் குமார் சின்கா பதவியேற்றார். தொடர்ந்து ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. ஐந்து நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆரிப் முகமது கான் நாளை இரு அவைகளின் உறுப்பினர்களுக்கும் கூட்டாக உரையாற்றுவார். அப்போது இரண்டாவது துணை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
* சபாநாயகர் பதவி – பாஜ வேட்பு மனு
பீகார் சட்டப்பேரவையில் இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. கயா டவுன் தொகுதியில் எட்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜ மூத்த தலைவர் பிரேம் குமார் என்டிஏ கூட்டணி சார்பில் சபாநாயகர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் மகாபந்தன் கூட்டணி வேட்பாளரை நிறுத்தாமல் விலகியுள்ளன. எனவே பிரேம்குமார் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
