- குடியரசுத் தலைவர்
- சி. பி. ராதகிருஷ்ணன்
- மோடி
- புது தில்லி
- துணை ஜனாதிபதி
- C.C.
- பி. பிரதமர் மோடி
- ராதாகிருஷ்ணன்
- இ.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியாவின் 15 வது துணைத் தலைவர்
- பி. ராதகிருஷ்ணன்
புதுடெல்லி: மாநிலங்களவை தலைவராக முதல் முறையாக அவையை வழிநடத்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை பிரதமர் மோடி வரவேற்று புகழாரம் சூட்டினார். இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த செப்டம்பர் மாதம் பதவியேற்றார். துணை ஜனாதிபதியே மாநிலங்களவை தலைவராவார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநிலங்களவை கூடியது.
அப்போது, பிரதமர் மோடி, சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்று பேசியதாவது: மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை வரவேற்பது எங்களுக்கு கிடைத்த பெருமை. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அனுபவமும், வழிகாட்டுதலும் அவையை சீராக நடத்த உதவும் என நம்புகிறேன். உங்கள் வழிகாட்டுதலில் அவை அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தி முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த அவையின் ஒவ்வொரு உறுப்பினரும் அதன் மரபுகளை மதித்து, உங்கள் கண்ணியத்தையும் நிலைநிறுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.
ராதாகிருஷ்ணன் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். சாதாரண பின்னணியில் இருந்து துணை ஜனாதிபதி பதவிக்கு அவர் உயர்ந்தது ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை பிரதிபலிக்கிறது. தனது முழு வாழ்க்கையையும் சமூக சேவைக்காக அர்ப்பணித்தவர் ராதாகிருஷ்ணன். அரசியல் அவரது பயணத்தில் ஒரு பகுதி மட்டுமே. இளமைப் பருவம் முதல் இன்று வரை சமூக சேவை என்பது அவரது முக்கிய பணியாக இருந்து வருகிறது. நெறிமுறைகளுக்கு எப்போதும் அப்பாற்பட்டவரான உங்களின் ஆளுமையானது, சேவை, அர்ப்பணிப்பு, பொறுமையை பிரதிபலிக்கிறது.
நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதற்கு 2 சம்பவங்களை நினைவுகூற விரும்புகிறேன். சிறு வயதில் அவிநாசி கோயில் குளத்தில் எதிர்பாராத விதமாக விழுந்து மூழ்கிவிட்டார். தண்ணீரில் இருந்து மயிரிழையில் தப்பித்த அந்த தருணம் சமூகத்திற்கு சேவை செய்வதற்கான வாழ்நாள் உறுதிப்பாடாக மாறியது. முன்னாள் துணை பிரதமர் அத்வானியின் யாத்திரையை குறிவைத்த குண்டுவெடிப்பிலும் ராதாகிருஷ்ணன் நூலிலையில் உயிர் பிழைத்துள்ளார். அந்த அனுபவம், மீண்டும் தேசத்திற்காக இன்னும் கடினமாக உழைக்கும் உறுதிப்பாடாக மாறி இருக்கிறது.
காசி சென்ற பிறகு அசைவ உணவை சாப்பிடுவதை கைவிட்டதாக ராதாகிருஷ்ணன் என்னிடம் கூறி உள்ளார். அசைவம் சாப்பிடுவதை தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் வாரணாசியின் எம்பியாக அவரது இந்த செயலை அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். ராதாகிருஷ்ணன் மாணவர் பருவத்தில் இருந்தே தலைமைத்துவ பண்புகளை வெளிப்படுத்தி உள்ளார். எளிதான பாதையை விட போராட்டமாக பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். எமர்ஜென்சியின் போது அவர் ஜனநாயகத்தின் உண்மையான சிப்பாயாக போராடினார். பொது விழிப்புணர்வுக்காக பாடுபட்டார். அவர் எப்போதும் திறமைசாலி. தனக்கு ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பிலும் சிறந்து விளங்கி மக்களை ஒன்றிணைத்துள்ளார். உங்கள் பயணம் முழு தேசத்திற்குள் ஊக்கமளிக்கிறது. மீண்டும் ஒருமுறை உங்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
