×

டிட்வா புயலால் 5 அடிக்கு மேல் கடல் சீற்றம்; மெரினா, பெசன்ட்நகர் கடற்கரைக்கு 2வது நாளாக பொதுமக்கள் செல்ல தடை: சர்வீஸ் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது

சென்னை: டிட்வா புயலால் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல 2வது நாளாக போலீசார் தடை விதித்துள்ளனர். டிட்வா புயலின் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அதிகாலை முதல் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. அதேநேரம் டிட்வா புயல் சென்னைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால், காற்றின் வேகம் மற்றும் கடலின் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் போலீசார் மெரினா மற்றும் பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் உள்ளே வர தடை விதிதுள்ளனர். காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து வருவதால் கடலின் சீற்றம் 5 அடிக்கு மேல் உள்ளது’. இதனால் மீனவர்கள் யாரையும் கடலுக்குள் செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சிலர் உற்சாக மிகுதியில் கடற்கரை பகுதிகளுக்கு கார்களில் வருகின்றனர். அவர்களை போலீசார் சர்வீஸ் சாலைகளுக்குள் விடாமல் திருப்பி அனுப்புகின்றனர். குறிப்பாக, அண்ணாசதுக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை காமராஜர் சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லும் அனைத்து சர்வீஸ் சாலைகளிலும் போலீசார் தடுப்புகள் மூலம் மூடியுள்ளனர். முக்கியமாக அனைத்து நுழைவாயில்களின் அருகே காவல் துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தடையை மீறி வரும் வாலிபர்களை போலீசார் மற்றும் மெரினா உயிர்காக்கும் படையினர் எச்சரித்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

டிட்வா புயல் கரையை கடக்கும் வரை கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பேரிடம் மீட்பு குழுவினர் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருடன் தயார் நிலையில் உள்ளனர்.

Tags : Tidwa ,Marina, Besantnagar beach ,Chennai ,Marina Beach ,Besantnagar beach ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது...