×

நிதி நிறுவனத்தில் பலகோடி நஷ்டம் விவகாரத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், மனைவி கைது: தனியார் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் சுற்றிவளைப்பு

சென்னை: சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தளபதி பாஸ்கர் (54). இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். ஆலப்பாக்கம் குரோம்பேட்டை, திருவள்ளூர், கொளத்தூர், ஆவடி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் சிட்பண்ட்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்தனர். கடந்த 3 மாதங்களாக பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவந்த தளபதி பாஸ்கர், மனைவி தேன்மொழியுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் தப்பினர்.

இந்நிலையில், தளபதி பாஸ்கர் தலைமறைவானார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தளபதி பாஸ்கரை பிடிக்க வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி தீவிரமாக தேடி வந்தனர். இதில், தளபதி பாஸ்கர் கோயம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பண முதலீடு செய்து பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டுவந்து தனியார் ஓட்டலை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவல்படி, கோயம்பேடு போலீசார் விரைந்து வந்து தளபதி பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தளபதி பாஸ்கருடன் வாக்குவாதம் செய்ததுடன் அவரை சிறை பிடித்தனர்.

பின்னர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வந்து தளபதி பாஸ்கரை கைது செய்தனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள், ‘தளபதி பாஸ்கரின் மனைவியையும் கைது செய்யவேண்டும்’ என்று கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து காரம்பாக்கம் பகுதியில் இருந்த தளபதி பாஸ்கரின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : Congress ,General Secretary ,Thalapathy Bhaskar ,Chennai ,Karambakkam ,Porur, Chennai ,state general secretary ,Congress party ,Alapakkam ,Chromepet ,Tiruvallur ,Kolathur ,Avadi ,Madipakkam ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...