சென்னை: வங்கக் கடலில் உருவாகி கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை, காற்றுடன் தமிழகம் நோக்கி பயணித்த டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது இன்று அல்லது நாளை தெற்கு ஆந்திராவுக்கு சென்று கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை அருகே தென் கிழக்குப் பகுதியில் உருவான டிட்வா புயல் இலங்கையில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழையை கொட்டித் தீர்த்துள்ளது. இலங்கையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள பாதிப்பால் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நேற்று காலையில் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழகத்தின் தென்மாவட்டங்களை நெருங்கியது. இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 200 மிமீக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் காற்றின் வேகமாறுபாடு காரணமாக புயலின் வேகம் குறைந்ததால் வலுவிழக்கத் தொடங்கியது. அதன் காரணமாக தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் 190 மிமீ மழை பெய்துள்ளது. மயிலாடுதுறை 160 மிமீ, நாகப்பட்டினம் 150 மிமீ, ராமநாதபுரம் 130 மிமீ, கடலூர் 120 மிமீ, தஞ்சாவூர், திருவாரூர் 110 மிமீ, மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகம்-புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து நேற்று மாலையில் காரைக்காலுக்கு வட கிழக்கே 100 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- தென் கிழக்கே 80 கிமீ தொலைவிலும் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கில் 120 கிமீ தொலைவிலும் நிலை கொண்டது. பின்னர் அது வடக்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கத் தொடங்கியது. இதையடுத்து வட தமிழகம்- புதுச்சேரி இடையே நகர்ந்து வந்து நள்ளிரவில் 30 கிமீ தொலைவில் நிலை கொண்டு மேலும் வடக்கு மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிக்கு நகரத் தொடங்கியது.
இதையடுத்து, வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யத் தொடங்கியது. அதனால் திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. தவிரவும், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
மேலும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றும் வீசியது. குறிப்பாக தரைக்காற்று மணிக்கு 70 கிமீ முதல் 80 கிமீ வேகத்தில் வீசியது. வட தமிழக கடலோர மாவட்டங்களை ஒட்டிய பகுதிகள், தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று வீசியது. மேற்கண்ட புயலின் நகர்வின் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரையில் கொடைக்கானல் பகுதியில் 14 மிமீ, காரைக்கால் பகுதியில் 10 மிமீ மழை பெய்தது. கடலூர் 9 மிமீ, நாகப்பட்டினம் 8 மிமீ, கடலூர் 7 மிமீ, புதுச்சேரி 5மிமீ, மழை பெய்த நிலையில் நேற்று மாலையில் மாமல்லபுரத்தில் அதிகபட்சமாக 12 மிமீ மழை பெய்தது. செங்கல்பட்டு 8 மிமீ மழை பெய்துள்ளது. செய்யூர் 13மிமீ, மழை பெய்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சென்னை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் வானம் பொதவாக மேகமூட்டதுடன் காணப்பட்டது. ஆங்காங்கே சிறு தூறலுடன் மழை பெய்தது. இதையடுத்து, இன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் இன்று வலுவிழந்த நிலையில் ெதற்கு ஆந்திரா நோக்கி செல்வதால், படிப்படியாக தமிழகத்தில் மழை பெய்வது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வட தமிழகத்தில் இன்று காலை முதல் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். இதன் காரணமாக ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
