×

ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்க முடிவு

ஈரோடு, ஜன. 12: கொரோனா தடுப்பூசி வருகின்ற 16ம் தேதி முதல் நாடு முழுவதும் மக்களுக்கு போடப்பட உள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் என கொரோனா முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன் பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தடுப்பூசிகள் போடும் மையத்தில் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக செயல்பட உள்ளது. மேலும் ஓவ்வொரு தடுப்பூசி மையத்திலும் பாதுகாவலர் பயனாளிகளை சரிபார்ப்பவர், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் என 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது.

இதில் சுகாதார இணை இயக்குநர் கோமதி, துணை இயக்குநர் சவுண்டம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் வருகின்ற 16ம் தேதி முதல் ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், சூரம்பட்டி நகர்புற சுகாதார நிலையம், பவானி அரசு மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை ஆகிய 7 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 11 ஆயிரம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags : corona vaccination centers ,district ,Erode ,places ,
× RELATED காதலனிடம் கொடுத்த நகைகளை மறைக்க...