திருவனந்தபுரம்: சபரிமலையில் மேல்சாந்தி, அர்ச்சகர்கள் தங்களது அறைகளில் வைத்து நெய் விற்பனை செய்யவோ, அபிஷேகம் செய்வதற்கு பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவோ கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வது வழக்கம். இதற்கு கட்டணம் ரூ.10 ஆகும்.
நெய்யை விற்பனை செய்வதற்காக சபரிமலையில் தேவசம் போர்டு சார்பில் தனி கவுண்டர்கள் உள்ளன. ஆனால் மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்கள் அறையிலும் அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்து வருகின்றனர்.இது குறித்து சபரிமலை சிறப்பு ஆணையாளர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். இதை பரிசீலித்த உயர்நீதிமன்றம், மேல்சாந்தி மற்றும் அர்ச்சகர்களின் அறைகளில் வைத்து அபிஷேகம் செய்த நெய்யை விற்பனை செய்யவும், அபிஷேகம் செய்வதற்காக பக்தர்களிடமிருந்து நெய் வாங்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஆம்புலன்சில் தான் கொண்டு செல்லவேண்டும்: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் சில பக்தர்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு மரணமடையும் பக்தர்களின் உடல்கள் சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு கேரள உயர்நீதிமன்றம் நேற்று தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. சன்னிதானம் செல்லும் வழியில் மரணமடையும் பக்தர்களின் உடல்களை ஆம்புலன்சில் தான் பம்பைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
* கொட்டும் மழையிலும் குவிந்த பக்தர்கள்
சபரிமலையில் நேற்றும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கும்போதே பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மாலை 5 மணிக்குள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஐயப்பனை தரிசித்தனர். 14 நாளில் இதுவரை 12 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர்.
