×

பதவியில் இருக்கும் போதே திருமணம் 62 வயதில் 46 வயது காதலியை கரம் பிடித்தார் ஆஸ்திரேலிய பிரதமர்

கான்பெரா: ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், ஜோடி ஹேடன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலிய வரலாற்றில் பிரதமர் பதவியில் இருப்பவர் திருமணம் செய்து கொள்வது இதுவே முதல்முறையாகும். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ். 62 வயதான இவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் உள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா பிரதமராக உள்ளார்.

இவர் தன்னுடைய 62 வயதில் நீண்ட நாள் காதலியான 46 வயது ஜோடி ஹேடன் என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலியா மட்டுமல்லாமல் இணையதளங்களில் இந்த திருமணம் தான் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஜோடி ஹேடனிடம் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது காதலை தெரிவித்தார்.

அவர் ஏற்றுக்கொண்டதை முன்னிட்டு நேற்று ஆஸ்திரேலியா பிரதமர் இல்லத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
62 வயதான அந்தோனி அல்பானீஸ், 2019ஆம் ஆண்டு தனது முதல் மனைவி கார்மெல் தெபூட் என்பவரை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு நாதன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மெல்போர்னில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஜோடி ஹேடனை சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஜோடி ஹேடன் நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும், பெண்களுக்கான வழக்கறிஞராகவும் உள்ளார்.

பதவியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்ட முதல் ஆஸ்திரேலிய பிரதமர் என்ற பெயரை அந்தோனி அல்பானீஸ் பெற்றுள்ளார். இந்த திருமணம் குறித்து பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகையில்,’ எங்கள் எதிர்கால வாழ்க்கையை ஒன்றாக, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கழிப்பதற்கான எங்கள் அன்பையும் அர்ப்பணிப்பையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

புதுமண தம்பதியினர் நாளை முதல் வெள்ளிக்கிழமை வரை தங்கள் தேனிலவைக் கழிப்பார்கள். அனைத்து செலவுகளையும் அல்பானீஸ் மற்றும் ஹேடன் தனிப்பட்ட முறையில் செலுத்துவார்கள் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags : Canberra ,Anthony Albanese ,Jodi Hayden ,minister ,Labour Party ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்