×

திருச்சி அருகே பாலதடுப்பில் கார் மோதி சென்னை இன்ஸ்பெக்டரின் கணவர், மருமகள் உயிரிழப்பு: மகன் படுகாயம்

துவரங்குறிச்சி: திருச்சி அருகே பாலதடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டரின் கணவர், மருமகள் பலியாகினர். மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை எல்ஜி நகரை சேர்ந்தவர் பேட்ரிக் (55). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சென்னை கொளத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகன் மெல்வின்(32). இன்ஜினியரான இவர், சென்னையில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய பிரிசில்லா(26). நேற்றுமுன்தினம் பேட்ரிக், தனது மகன் மற்றும் மருமகளுடன் சென்னைக்கு சென்று விட்டு இரவு காரில் மதுரைக்கு திரும்பி கொண்டிருந்தார். காரை மகன் மெல்வின் ஓட்டினார்.

நேற்று காலை 9 மணி அளவில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கோசிக்குறிச்சி பிரிவு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த பாலத்தின் தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாட்டுக்குள் சிக்கிய பேட்ரிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மெல்வின், ஆரோக்கிய பிரிசில்லா ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஆரோக்கிய பிரிசில்லா இறந்தார். மெல்வினுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Chennai ,Trichy ,Dhuvarankurichi ,Patrick ,LG Nagar ,Pudukkottai, Nagamalai, Madurai district ,
× RELATED திருச்சி, மதுரை விமான சேவையை குறைத்தது இண்டிகோ விமான நிறுவனம்..!