புதுச்சேரி: புதுச்சேரியில் வருகிற 5ம் தேதி விஜய் ரோடு ஷோவுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். புதுச்சேரியில் வரும் டிசம்பர் 5ம் தேதி தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு, கடந்த 25ம் தேதி அக்கட்சியின் மாநில நிர்வாகி புதியவன் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் முதல்வர் ரங்கசாமி மற்றும் டிஜிபி செயலரிடம் மனு அளித்தனர்.
இதற்கிடையே, புதுச்சேரி குயவர்பாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக் ராஜா, பொதுமக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து பொது சாலைகளில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து டிஜிபி அலுவலகத்தில் முறையிட்டார். இந்நிலையில், புதுச்சேரியில் ரோடு ஷோ நடைபெற்றாலும் தமிழகத்தின் அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் இருந்து மட்டுமின்றி திருவண்ணாமலையில் இருந்தும் அதிகளவில் ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் கரூர் சம்பவத்தைபோல் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி போலீசார் அனுமதி தர மறுத்துள்ளனர்.
இதையறிந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று மதியம் புதுச்சேரி காவல் துறை தலைமையகம் வந்தார். அவருடன், அண்மையில் கட்சியில் இணைந்த முன்னாள் பாஜ தலைவரும், மாஜி எம்எல்ஏவுமான சாமிநாதனும் வந்திருந்தார். டிஜிபி அறையில் சுமார் 10 நிமிடம் இருவரும் காத்திருந்தனர். டிஜிபி, ஐஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பின்னர் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்திடம் நிருபர்கள் கேட்டதற்கு, எந்த பதிலும் அளிக்காமல் சென்றார்.
புதுச்சேரியில் அரசியல் கட்சி பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கு காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் பேசி வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்து இருந்தார்.
ஆனால் வழிகாட்டி நெறிமுறைகள் இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. எனவே, விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் ரங்கசாமியை புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து முறையிட்டார். இதுகுறித்து ரங்கசாமியிடம் கேட்டதற்கு, ‘தவெக கூட்டத்திற்கு தலைமை செயலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
