சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை கல்லூரி மாணவர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர். பிறகு மகிழ்ச்சியுடன் குரூப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். திமுக மாணவர் அணி சார்பில் ஒரு லட்சம் மாணவர்கள் இலக்கு என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் அணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில் உறுப்பினர் சேர்க்கை என்பது விறுவிறுப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக சென்னையை சேர்ந்த 500 கல்லூரி மாணவ-மாணவிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார். அப்போது, 500 மாணவர்கள் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். அவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
மேலும் வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணை பொது செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை திருச்சி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மாணவர் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் திமுகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
