×

ஐயப்பன் அறிவோம் 14: எருமேலியில் இருந்து ஆரம்பிக்கலாங்களா?

ஓரு பயணத்தை துவக்குகிறோம். அதில் துவக்க இடம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதுபோல ஒரு ஐயப்ப பக்தர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி… அவர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா உட்பட எந்த வெளிநாடாக இருந்தாலும் சரி… அவர் இருமுடி கட்டி எந்த இடத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்றாலும் பிரச்னையில்லை. ஆனால், ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடம் இருக்கிறது. அதுதான் எருமேலி.

எருமேலி கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், மணிமாலா நதிக்கரையில் அமைந்துள்ளது. வளர்ப்புத்தாய் மகாராணிக்காக புலிப்பாலை தேடி ஐயப்பன், வனத்திற்கு சென்றபோது எருமேலியில்தான் மகிஷியை வாள் உட்பட 18 விதமான ஆயுதங்களை கொண்டு அழித்ததாக கூறப்படுவதுண்டு. மகிஷி எருமை தலையை உருவமாக கொண்டவர். ஆகையால், எருமையை கொன்ற இடம் என்பதை குறிக்கும்படி ‘எருமைக்கொல்லி’ என துவக்கத்தில் இந்த இடம் அழைக்கப்பட்டது. பிறகு எருமேலி என மாறியதாகவும் கூறப்படுவதுண்டு.

எருமேலியில் மகிஷியை வதம் செய்த ஐயப்பன் தங்கி சென்ற இடத்தை ‘புத்தன் வீடு’ என்று அழைக்கின்றனர். இங்கு வதம் செய்ய ஐயப்பன் பயன்படுத்திய வாள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் பிப்ரவரியில் 10 நாட்கள் திருவிழா விசேஷமாக நடக்கும். மேலும், எருமேலியில்தான் பந்தள நாட்டின் மன்னனும், ஐயப்பனின் வளர்ப்பு தந்தையுமான மன்னர் ராஜசேகரனால், பார்த்து, பார்த்து கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது.

இங்கு வேட்டைக்கு செல்வது போல வில், அம்புவை ஏந்தி நிற்கும் கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். மேலும், பகவதி, நாகராஜர் சிலைகளும் உள்ளன. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க எருமேலியிலிருந்து வனப்பகுதி வழியாகவே பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் சென்று வந்துள்ளனர். எருமேலியில் இருந்து சபரிமலை சன்னிதானம் வரையுள்ள பாதையை பெருவழிப்பாதை என்கின்றனர்.

இந்தப்பாதை வழியாகவே ஐயப்பனை ஒரு பக்தராக தரிசிக்க மன்னர் ராஜசேகரன் நடந்து சென்றதாகவும் கூறுவதுண்டு. அவ்வளவு சிறப்புமிக்க இடமாக இருப்பதாலேயே ஐயப்ப தரிசனத்தில் எருமேலி முக்கிய பங்காற்றுகிறது. ஐயப்பனுக்கு சரண கோஷம் மட்டுமே கூறி, பயபக்தியுடன் அமைதியான முறையில் தரிசனத்திற்கு வரும் கன்னி சாமிகள் எருமேலி வந்ததும் வேற லெவலுக்கு மாறுவார்கள்… அது மிக மிக முக்கியமானதும் கூட. அப்படி என்ன மாற்றம் அது என்கிறீர்களா…? பேட்ட பராக்…! தரிசனம் தொடர்வோம்

Tags : Ayyaph ,Ayyappa ,Tamil Nadu ,Andhra ,Karnataka ,Singapore ,Malaysia ,USA ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...