- முல்லைப்
- கொளத்தூர் சரிவு
- கொளத்தூர் நிலையம்
- மெட்ரோ ரயில் நிர்வாகம்
- சென்னை
- பாதை
- மெட்ரோ ரயில் நிர்வாகம்…
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்தில் வழித்தடம் 5-ல் ‘முல்லை’ என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்துள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
கட்டம் 2 வழித்தடம் 5 மாதவரம் பால் பண்னையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூர் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ நீளத்தில் 5 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் (5.8 கி.மீ.), 39 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் (41.2 கி.மீ) அமைக்கப்படவுள்ளது. 5.8 கி.மீ. நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை பிரிவுக்கு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தபடுகின்றன.
வழித்தடம் 5-ல் சுரங்கப்பாதை கட்டுமான பணிகளில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை கொளத்தூர் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூர் நிலையம் வரை 246 மீ. நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை கடந்த மே மாதம் தொடங்கி கொளத்தூர் நிலையத்தை வந்தடைந்தது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் முல்லை 1.8 மீட்டர் மிகக் குறைந்த சுமை, 3.8 சதவீதம் செங்குத்தான சாய்வு மற்றும் அதிக போக்குவரத்துக்கு உட்பட்ட உள்வட்டச் சாலையின் நடுவில் தரைப் பாதுகாப்புக்கான தேவை போன்ற அனைத்து சவால்களையும் கடந்து பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்துக்கோ எந்தவித இடையூறும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது.
மேலும் அதே நேரத்தில், ‘குறிஞ்சி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொளத்தூர் நிலையம் முதல் ஸ்ரீனிவாசா நகர் வரை 1060 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடினமான பாறைகள் மற்றும் 230 மீட்டர் நீளத்திற்குச் கூர்மையான வளைவுகளையும் கடந்து செல்லும்.
ஒரே மெட்ரோ நிலையத்தில் (கொளத்தூர் மெட்ரோ) ஒரே நேரத்தில் ஒரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியிருப்பதும், மற்றொரு சுரங்கம் தோண்டும் இயந்திரம் தனது பணியை முடித்து வெளியே வந்திருப்பதுமான இந்த இரட்டைச் செயல்முறை, நம் இந்திய நாட்டில் இதுவே முதன்முறை. இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
