×

மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜ அரசு வஞ்சிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கடும் கண்டனம்

சென்னை: மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை ஒன்றிய பாஜ அரசு வஞ்சித்து வருகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி, மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

* திராவிட மாடல் அரசின் வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப்படும் ஒன்றிய பாஜ அரசு, நிதி ஆணையத்தின் வாயிலாக நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் மற்றும் அந்த ஆணையம் அளித்துள்ள அதிகார பகிர்வுகளை அளிக்க மறுப்பது, மாநிலங்களில் செயல்படுத்தப்படும் ஒன்றிய அரசின் திட்டங்களின் நிதிச்சுமையை இதுவரை இல்லாத அளவிற்கு மாநில அரசின் தலையில் சுமத்துவது, ஒன்றிய அரசு மட்டுமே செஸ் வசூலித்து மாநிலத்திற்கு அறவே அளிக்க மறுப்பது, ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்காமல் நிராகரித்து, மாநிலத்தின் வரிகளை மட்டும் வசூலித்துக் கொள்வது,

சிபிஐ-அமலாக்கத்துறை- வருமானவரித்துறை என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்யத் தூண்டுவது, எல்லாவற்றுக்கும் மேலாக ஆளுநர்களை நியமித்து, பாஜ அரசு இல்லாத மாநிலங்களில் அராஜகத்தில் ஈடுபடுவது என கூட்டாட்சிக் கருத்தியலைச் சிதைக்கும் நடவடிக்கைகளை தனது அன்றாட “அரசு நடவடிக்கைகளாக” ஆக்கிக் கொண்டுள்ள ஒன்றிய பா.ஜ அரசு, திட்டம் போட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்து, நம் மாநிலத்திற்கான எந்த முத்திரை திட்டங்களும் தராமல் மறுத்து,

அறிவிக்கப்பட்ட ஒன்றிரண்டு திட்டங்களைக்கூட முடக்கி, “ஒன்றிய-மாநில அரசு நிர்வாக ஒத்துழைப்பில்-!உறவில்” ஓர் கருப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ள ஒன்றிய பாஜ. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது. ஒன்றிய அரசே! ஒன்றியஅரசே! மக்கள் நலன் காப்பதில் முதல்வரிசையில் நிற்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களை வஞ்சிக்காதே என்ற உரிமைக்குரலை இந்த கூட்டம் முன்வைக்கிறது.

* புதிய ரயில் திட்டங்களும் இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட பல்வேறு முக்கியமான ரயில் திட்டங்களும் செயல்படுத்தப்படுவதில்லை. ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் நிலையை உடனடியாக கைவிட்டு, மாநிலத்திற்கான ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும்.

* கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒன்றிய அரசு வாய் திறக்காமல் இருப்பது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமான செயல் என இக்கூட்டம் தனது கண்டனத்தை பதிவுசெய்து, இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கிட பிரதமர் நேரிடையாகத் தலையிட வேண்டும்.

* மாநிலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, கோவை-மதுரை விமான நிலைய விரிவாக்க திட்டங்களுக்கும்-மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கும் விரைந்து ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவிற்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்யும் சட்டப் போராட்டத்தில் ஓயமாட்டோம் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சபதத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள்.

* செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று நிறைவேற்றிட வேண்டும்.

* விசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 17 விழுக்காடு ஈரப்பதத்தில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை தளர்வு செய்து, 22 விழுக்காடு வரை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும்.

* 2024-25 மற்றும் 2025-26ம் ஆண்டுகளுக்கான ஒன்றிய அரசால் தமிழ்நாட்டிற்கு “சமக்ர சிக்ஷா” திட்டத்தின்கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 3548.22 கோடி ரூபாயை உடனே விடுவித்திட வேண்டும்.

* ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்களின் உரிமை பாதிக்கப்படக்கூடாது.

* இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விரைவாக விடுவிப்பதற்கும் நிரந்தரத் தீர்வு அவசியம்.

* இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம்-2009 மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் சட்டம்-1993 ஆகியவற்றில் உரிய சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஆசிரியர் தகுதி தேர்வில் 23.8.2010 முன்பு பணி நியமனம் பெற்று தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் பணி மற்றும் பதவி உயர்வினை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும்.

* மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய 1290 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 30 கோடி மனித நாட்களுக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கான உத்தரவினை நடப்பாண்டில் 12 கோடி மனித நாட்களாகக் குறைத்துள்ளதை உடனடியாக உயர்த்தி இந்த ஆண்டும் 30 கோடி மனித நாட்களுக்கு அனுமதி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* குட்ட குட்ட குனிய மாட்டோம் நிமிர்ந்து நடைபோடுவோம் முதல்வர் எச்சரிக்கை
திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது: மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பாஜ அரசு புறக்கணிப்பது சரியா?. தமிழ்நாட்டின் கோரிக்கைகளை-தேவைகளை கடிதங்களாக, நேரில் மனுக்களாக, சட்டமன்றத் தீர்மானங்களாக எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயமல்ல!

அதிகமான வரி வருவாயைத் தரும் மாநிலமான தமிழ்நாட்டுக்கு வஞ்சனை செய்வதை மனச்சாட்சியுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். உங்கள் வஞ்சனைகளைக் கடந்துதான் நாட்டிலேயே அதிகமான 11.19% பொருளாதார வளர்ச்சியை அடைந்திருக்கிறோம். குட்ட குட்ட குனிய மாட்டோம்; நிமிர்ந்து நடைபோடுவோம்! வருகின்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகளிடம் ஒன்றிய பா.ஜ. அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union BJP government ,Tamil Nadu ,DMK ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Chief Minister… ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...