×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேற தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

தி.மலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகம் பக்தர்கள் மலையேற தடைவிதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 03.12.2025 அன்று அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

கடந்த ஆண்டு பெஞ்சால் புயல் காரணமாக கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டு அதன் தொடர்ச்சியாக அண்ணாமலையார் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டு மலை ஏறுவதற்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவியதால் கடந்த ஆண்டு பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு டிட்வா புயல் காரணமாக மிக கனமழை பொழிவதற்கான (ஆரஞ்ச் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய புவியியல் ஆய்வு மைய புவியியல் வல்லுநர் குழு அறிக்கையில் மலையேறும் பாதை தற்போதும் உறுதித்தன்மை அற்றும், ஏற்கனவே நிலச்சரிவுகள் ஏற்பட்ட இடங்களின் மைய பகுதிகளில் பல்வேறு தளர்வான கற்பாறைகள் உள்ளதாகவும், தெரிவித்துள்ளது. எனவே, புயல் எச்சரிக்கை மற்றும் வல்லுநர் குழு அறிக்கை அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இந்த ஆண்டும் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் எடுக்கும்.

இந்நடவடிக்கைக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து மலையேறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மலையேறும் பாதையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கண்காணிக்க காவல் துறை, வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது. மலை ஏற முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thiruvannamalai Karthigai Deepat Festival ,District Administration ,Tiruvannamalai Karthigai Deepat festival ,Trinukarthigai Dibatruvizhya ,
× RELATED குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின்...