×

வள்ளலார் பன்னாட்டு மாநாடு சென்னையில் நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: வள்ளலார் பன்னாட்டு மாநாடு சென்னையில் நடத்தப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று ஆணையர் அலுவலகத்தில் திருஅருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க பன்னாட்டு மாநாடு – 2026 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் வள்ளலார் சர்வதேச மாநாட்டை சிறப்பாக நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து துறை அலுவலர்கள் மற்றும் வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் வள்ளலார் பன்னாட்டு மாநாட்டினை சென்னையில் 2026 ஜனவரி மாதத்தில் நடத்துதல், மாநாட்டு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் வகையில் துறை மற்றும் சன்மார்க்க அமைப்புகளை கொண்ட குழுக்களை அமைத்தல், வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க வருகை தரும் சன்மார்க்க அன்பர்களுக்கான வசதிகளை ஏற்பாடு செய்தல், வள்ளலாரின் நெறிகளை பரப்பிடும் வகையிலான கண்காட்சி, மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம் அமைத்தல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வள்ளலார் குறித்த இலக்கிய போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குதல், கருத்தரங்கம், ஆய்வரங்கம், சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், நாள் முழுவதும் அன்னதானம் வழங்குதல், சிறந்த சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்பு செய்தல், மாநாட்டு மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் வெளியிடுதல்,

வள்ளலாரின் தத்துவங்கள் மற்றும் அருள்நெறியைப் பரப்பிடும் வகையில் முழுவதும் பெண்களே பங்கேற்கும் பேரணி நடத்துதல் போன்ற பொருண்மைகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. நிறைவாக, அமைச்சர் பேசுகையில், முதலமைச்சர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமகனாரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நற்பணிகளை ஆற்றி வருவதை அனைவரும் அறிவோம். திருஅருட்பிரகாச வள்ளலார் பிறந்த அக்டோபர் 5 ஆம் நாளை “தனிப்பெருங்கருணை நாள்” ஆக கடைபிடிக்கப்படும் என அறிவித்ததோடு மட்டுமல்லாமல், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு வடலூரில் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்கு ரூ.99.90 கோடியை அரசு நிதியாக வழங்கினார்கள்.

வள்ளலாரின் முப்பெரும் விழாவினை அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை 52 வாரங்களுக்கு சிறப்பாக கொண்டாடியதோடு, அதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் அவர்களே கலந்து கொண்டு, வள்ளலார் – 200 இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து, முப்பெரும் விழாப் பணிகளுக்காக ரூ.3.25 கோடியை அரசு நிதியாக வழங்கினார். நிறைவு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்று சிறப்பு செய்தார்.

அதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் அவர்களின் அறிவுரைகளை பெற்று, வருகின்ற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் திருஅருட்பிரகாச வள்ளலார் சுத்த சன்மார்க்க பன்னாட்டு மாநாடு – 2026 மிக சிறப்பாக சென்னையில் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு தயாராக உள்ளது. ஆகவே, துறை அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து, எல்லா வகையிலும் இம்மாநாடு சிறப்பாக அமைந்திட அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் துரை.ரவிச்சந்திரன், கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுகிசிவம், தேச மங்கையர்க்கரசி, இணை ஆணையர்கள் இரா.வான்மதி, சி.ஜோதி, கி. ரேணுகாதேவி, ஜ.முல்லை, பெ.க.கவெனிதா, வடலூர் தெய்வ நிலையத்தின் அறங்காவலர் குழுத் தலைவர் க.அழகானந்தன், வடலூர் தலைமை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் அருள் நாகலிங்கம், வெற்றிவேல், நிர்வாகிகள் வெங்கடேசன், செந்நெறி தண்டபாணி, செயல் அலுவலர் ஜெ. ராஜா சரவணகுமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : VALLALAR INTERNATIONAL CONFERENCE ,CHENNAI ,MINISTER ,SEKARBABU ,B. K. Sekarpapu ,Chief Minister ,Mu. K. ,Stalin ,Minister of the Department of ,Hindu ,Religious Affairs ,P. K. ,International Conference of Thiruarudprakash Vallalar Chhatta Sanmarakha ,Office ,Sekharbhabu ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...