சாவ் பாலோ: உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசி பயன்பாட்டிற்குப் பிரேசில் நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வ அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாகக் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த காய்ச்சலால் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் ஒரு கோடியே 46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர் மற்றும் சுமார் 12,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஏடிஸ் கொசுக்களால் பரவும் இந்த காய்ச்சல், தற்போது புதிய பகுதிகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் முயற்சியில் ஒரு மைல்கல்லாக, உலகின் முதல் ஒரு டோஸ் டெங்கு தடுப்பூசியான ‘புதான்டன்-டிவி’ பயன்பாட்டிற்குப் பிரேசில் சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. சாவ் பாலோவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தடுப்பூசி, 12 வயது முதல் 59 வயதுடையவர்களுக்குச் செலுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
16,000 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்தத் தடுப்பூசி கடுமையான டெங்கு பாதிப்பைத் தடுப்பதில் 91.6 சதவீதமும், பொதுவான அறிகுறிகளைக் குறைப்பதில் 80 சதவீதமும் பலன் அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகள் இரண்டு டோஸ் போடப்பட வேண்டிய சூழலில், இந்த ஒரே தவணை தடுப்பூசி மூலம் வரும் 2026ம் ஆண்டிற்குள் 3 கோடி டோஸ்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
