×

டிசம்பர் 1ம் தேதி நாடாளுமன்றம் கூடும் நிலையில் நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் வியூகம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வரும் 30ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் டிசம்பர் 5 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தனிநபர் மசோதாக்களும், டிசம்பர் 12ம் தேதி தனிநபர் தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. கடந்த கூட்டத்தொடரின்போது ‘எஸ்.ஐ.ஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களால், நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தொடரை எவ்வித கூச்சல் குழப்பமும் இன்றி சுமுகமாக நடத்தும் நோக்கில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வரும் 30ம் தேதி (நாளை மறுநாள்) அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மரபுப்படி நடைபெறும் இக்கூட்டத்தில், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை விளக்கியுள்ள அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘நாடாளுமன்றம் அமைதியாக நடைபெறும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் விரும்பும் எந்தவொரு தலைப்பு குறித்தும் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

தற்போதைய கூட்டத்தொடரில் பாதுகாப்பு ஆய்வு விவகாரத்தை மீண்டும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் வேலைவாய்ப்பின்மை, மணிப்பூர் நிலவரம், வாக்காளர் பட்டியல் குளறுபடி, எஸ்ஐஆர் விவகாரம் மற்றும் ரயில் விபத்துகள் போன்ற முக்கியப் பிரச்னைகளை முன்வைத்து ஒன்றிய அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் வியூகம் அமைத்துள்ளன. அண்மையில் நடந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், இத்தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசின் தரப்பிலும், மக்கள் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், வரும் 30ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் எட்டப்படும் ஒருமித்த முடிவுகள் இத்தொடரின் செயல்பாட்டிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், ‘பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசித்து நிலுவையில் உள்ள மசோதாக்களை ஆய்வு செய்துள்ளோம்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் மசோதாக்களின் பட்டியலை வழங்கி, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகு அதற்கேற்ப வியூகங்கள் வகுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அரசியல் சாசனத்தின் 240வது பிரிவின் கீழ் சண்டிகரை கொண்டு வருவது தொடர்பான 131வது சட்டத் திருத்த மசோதா இத்தொடரில் கொண்டு வரப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கான சட்டமியற்றும் நடைமுறையை ஒன்றிய அரசு எளிதாக்க முயல்வதாகக் கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாகப் பல்வேறு யூகங்கள் பரவின. இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம், ‘சண்டிகர் நிர்வாகக் கட்டமைப்பிலோ அல்லது பஞ்சாப், அரியானா மாநிலங்களுடனான பாரம்பரிய ஏற்பாடுகளிலோ எந்த மாற்றமும் செய்யப்படாது’ என்று தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், ‘அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை; வரவிருக்கும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதுதொடர்பான எந்த மசோதாவையும் தாக்கல் செய்யும் உத்தேசம் ஒன்றிய அரசிடம் இல்லை’ என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Union ,Delhi ,Winter Session of the Parliament ,
× RELATED பஞ்சாப் ஆளும் ஆம்ஆத்மியில் பரபரப்பு;...