மும்பை: உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் வீதி அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்குக் காரணம் பெண்களின் ஆடைதான் எனப் பழிசுமத்தப்படும் போக்கு நீண்ட காலமாகவே உள்ளது. இந்த பிற்போக்குத்தனமான கருத்தை உடைத்தெறியும் வகையில், லோரியல் பாரிஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ‘வீதியில் நடக்கும் அத்துமீறல்களுக்கு எதிராக எழுந்து நில்லுங்கள்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், பெண்களுக்கு மிக முக்கியமான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அவர் வழக்கமான அறிவுரைகளைப் புறந்தள்ளிவிட்டு, பெண்கள் பிரச்னையைத் தவிர்க்காமல் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா ராய், ‘பெண்களே, உங்களுக்கு நேரும் அத்துமீறல்களுக்கு உங்கள் ஆடையையோ அல்லது உதட்டுச்சாயத்தையோ காரணமாகக் கூறி உங்களை நீங்களே குறை சொல்லாதீர்கள். பிரச்னையைக் கண்டு தலைகுனிந்து செல்வதை விட்டுவிட்டு, அதனைத் துணிச்சலாகக் கண்களைப் பார்த்து எதிர்கொள்ளுங்கள். இது உங்கள் உடல், உங்கள் மதிப்பு, இதில் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். சாலையில் நடக்கும் அத்துமீறல்களுக்கு ஒருபோதும் நீங்கள் காரணமல்ல, தவறு செய்பவர்களே பொறுப்பு. எனவே தலைநிமிர்ந்து தைரியமாக நடங்கள்’ என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். ஐஸ்வர்யா ராயின் இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், பலரும் அவரது துணிச்சலான பேச்சுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
