×

மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கி கொடுத்ததால் பாஜக கூட்டணி கட்சியின் 7 தலைவர்கள் ராஜினாமா: ராஷ்டிரிய லோக் மோர்ச்சாவில் அதிருப்தி

பாட்னா: வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகக் கூறி கட்சித் தலைவர் உபேந்திர குஷ்வாஹாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளில் நான்கில் வெற்றி பெற்றது. இதில் உபேந்திர குஷ்வாஹாவின் மனைவி சினேலதாவும் சசாரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார்.

உபேந்திர குஷ்வாஹா ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக இருக்கும் சூழலில், கூட்டணி தலைவர்களுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி எம்எல்ஏவாக இல்லாத (எம்எல்சியாக தேர்வாக வாய்ப்பு) தனது மகன் தீபக் பிரகாஷை அமைச்சராக்கினார். கட்சியின் மூத்த தலைவர்களைப் புறக்கணித்துவிட்டு, தனது குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிகாரத்தை குவித்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகக் கூறி கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ஜிதேந்திர நாத், மாநில பொதுச்செயலாளர் ராகுல் குமார் உள்ளிட்ட 7 முக்கிய நிர்வாகிகள் நேற்று கட்சியிலிருந்து கூண்டோடு விலகினர்.

கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு, சொந்த மகனுக்கு அமைச்சர் பதவி வழங்கியதைக் கண்டித்து அவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள உபேந்திர குஷ்வாஹா, ‘சிறிய கட்சிகளை உடைத்து எம்.எல்.ஏக்களை இழுக்கும் சூழல் நிலவுவதால், கட்சியின் எதிர்காலத்தைக் காப்பாற்றவும், கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்கவும் இந்த முடிவு அவசியமானது மற்றும் தவிர்க்க முடியாதது’ என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தனது மகன் கணினி அறிவியலில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags : BJP alliance ,Rashtriya ,Lok Morcha ,Patna ,Upendra Kushwaha ,Bihar ,BJP-JD ,U ,National Democratic Alliance… ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...