×

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: படுகாயம் அடைந்த பெண் பாதுகாவலர் பலி

வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அருகே நேற்று முன்தினம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தேசிய பாதுகாவலர்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் மேற்கு வர்ஜீனியாவைச் சேர்ந்த சாரா பெக்ஸ்ட்ரோம் மற்றும் ஆண்ட்ரூ வோல்ஃப் ஆகிய இரண்டு பாதுகாவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சாரா பெக்ஸ்ட்ரோம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘நமது நாட்டுக்காகப் பணியாற்றிய வீராங்கனையை நாம் இழந்துவிட்டோம்’ என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், காயமடைந்த மற்றொரு வீரரான ஆண்ட்ரூ வோல்ஃப் தொடர்ந்து உயிருக்குப் போராடி வருகிறார். இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியவர் ரஹ்மானுல்லா லகன்வால் (29) என்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்காவுக்கு அகதியாக வந்த இவர், மறைந்திருந்து இந்தத் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியுள்ளார். பதில் தாக்குதலில் காயமடைந்த இவரும் தற்போது போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் உள்ள ஆப்கான் அகதிகள் மீதான கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியுள்ளது.

இது குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாகவே பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆப்கானியர்களின் குடியேற்றக் கோரிக்கைகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

Tags : White House ,Washington ,National Guard ,US ,Sarah Beckstrom ,West Virginia… ,
× RELATED உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை