×

600 கிலோ எடையுடன் வாழ்ந்த உலகின் மிகக் குண்டு மனிதர் மரணம்

மெக்சிகோ சிட்டி: உலகின் அதிக எடை கொண்ட மனிதராக கின்னஸ் சாதனை படைத்த மெக்சிகோ இளைஞர், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ (41) என்பவர், கடந்த 2017ம் ஆண்டு சுமார் 600 கிலோ (1,322 பவுண்ட்) எடையுடன் காணப்பட்டார். இதன் மூலம் ‘உலகின் அதிக எடை கொண்ட மனிதர்’ என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இவர் இடம் பிடித்தார்.

அதீத உடல் பருமன் காரணமாக அவரால் கை, கால்களை அசைக்க முடியாமலும், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாமலும் அவதிப்பட்டு வந்தார். மேலும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு போன்ற நோய்களும் அவரை தாக்கியது. இந்நிலையில் மருத்துவர் ஜோஸ் அன்டோனியோ காஸ்டனெடா என்பவரின் கண்காணிப்பில் பிராங்கோ தீவிர சிகிச்சை பெற்றார். கடுமையான உணவு கட்டுப்பாடுகள் மற்றும் 2 முறை செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மூலம், தனது எடையில் பாதியைக் குறைத்து 260 கிலோவாக மாறினார். கடந்த 2020ம் ஆண்டு இவரை தாக்கிய கொரோனா தொற்றிலிருந்தும் வெற்றிகரமாக மீண்டு வந்தார்.

இருப்பினும் கடந்த சில நாட்களாக கடுமையான சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், அகுவாஸ்காலிண்டஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காஸ்டனெடா கூறும்போது, ‘உடல் பருமன் என்பது ஒரு மருத்துவ நோய், அது தனிப்பட்ட தோல்வி அல்ல. உடல் எடையை குறைத்து புது வாழ்வு வாழத் தொடங்கிய நிலையில், ஜுவான் பெட்ரோ பிராங்கோ உயிரிழந்தார்’ என்று கூறினார்.

Tags : Mexico City ,Juan Pedro Franco ,Mexico ,
× RELATED வங்கதேசத்தில் கலிதா ஜியா இறுதி...