புதுடெல்லி: மாநிலங்களவை தலைவரை விமர்சித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மீது உரிமை மீறல் குழு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாஜக எம்பி சுதான்ஷு திரிவேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மாநிலங்களவை தலைவரை ஆளும் கட்சியின் ‘ஊதுகுழல்’ போல செயல்படுவதாக ஜெயராம் ரமேஷ் விமர்சித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவைத் தலைவரை அவமதிக்கும் வகையில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதாகக் கூறி, அப்போதைய அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் இப்புகாரை உரிமை மீறல் குழுவின் விசாரணைக்கு அனுப்பியிருந்தார். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கவுள்ள சூழலில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் உரிமை மீறல் குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுதான்ஷு திரிவேதி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். புகாரை ஆய்வு செய்த இக்குழு, அவைத் தலைவருக்கு எதிராகத் தொடர்ந்து இழிவான கருத்துகளைத் தெரிவித்த விவகாரத்தை மிகவும் தீவிரமான விஷயமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவர், ‘அவைத் தலைவரை அவமதிக்கும் நோக்கில் நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை; என்னுடைய பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை’ என்று குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், குழு உறுப்பினர்கள் இந்த விளக்கத்தை ஏற்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்ட இந்த நாடாளுமன்ற உரிமை மீறல் குழு, அவையால் பரிந்துரைக்கப்படும் புகார்களை விசாரித்து, உண்மையான உரிமை மீறல் நடந்துள்ளதா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் படைத்தது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆலோசனையில் எடுக்கப்படும் முடிவுகள், ஜெயராம் ரமேஷ் மீது எத்தகைய நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
