ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. ஹாங்காங் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டாய் போ மாவட்டத்தில் 32 மாடிகள் கொண்ட 8 பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்தக் கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் கட்டிடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சாரத்தில் திடீரென தீப்பிடித்தது. மோசமான விபத்தில் சிக்கி, ஒரு தீயணைப்பு வீரர் உட்பட 80க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், புனரமைப்பு பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் பொறியாளர் என 3 பேரை கைது செய்துள்ளனர். தீயை அணைக்க 800க்கும் மேற்பட்ட வீரர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர். வீடுகளை இழந்து தவிக்கும் 900க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரசு நிவாரண உதவிகளையும், தற்காலிக தங்குமிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளது.
