ஊட்டி : குந்தா கோத்தகிரி பழங்குடியின கிராமத்தில் எஸ்ஐஆர் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் 01.01.2026ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும் பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது வீடுதோறும் கணக்கீடு செய்து வருகிறது. இம்மாதம் 4ம் தேதி துவங்கி இந்த முகாம் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை நடக்கிறது.
தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு தோறும் சென்று, தற்போதைய வாக்காளர்களுக்கு முன்பே நிரப்பப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை விநியோகித்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மீண்டும் சேகரித்து வருகின்றனர். எந்தவொரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று படிவங்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் குறித்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குந்தா ேகாத்தகிரி பழங்குடியின கிராமத்தில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில், கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடை அணிந்து, பாரம்பரிய நடமானடி பொதுமக்களுக்கு எஸ்ஐஆர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இது போன்று மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
