×

நெல்லை அருகே திடியூர் பகுதியில் வெள்ளநீர் கால்வாய் தடுப்பணையில் உடைப்பு

* ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம்

* பொதுமக்கள், விவசாயிகள் மறியல்

நெல்லை : நெல்லை அருகே திடியூர் பகுதியில் வெள்ளநீர் கால்வாய் தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. நெல்லை மாவட்டம் திடியூர் அருகே தமிழாக்குறிச்சி பகுதியில் வெள்ளநீர் கால்வாய் பச்சையாறு தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ள காலத்தில் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், மாவட்டத்தின் வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை திருப்பி விடவும் கடந்த 2009ம் ஆண்டு வெள்ளநீர் கால்வாய் திட்டம் துவங்கப்பட்டு 4 கட்டங்களாக பணிகள் முடிக்கப்பட்டது.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் பச்சையாறு தண்ணீரையும் இணைக்கும் வகையில் தமிழாக்குறிச்சியில் 240 மீட்டர் நீளம், 5.945 மீட்டர் உயரத்தில் அணை கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும்போது வெள்ளநீர் கால்வாய் திறக்கப்பட்டு தண்ணீர் வந்து சேரும். பின்னர் பிற பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் வெள்ளநீர் கால்வாயில் கோரையாறு, பச்சையாறு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளத்தால் தமிழாக்குறிச்சி அணை நிரம்பியது. இதனிடையே காரியாண்டி பகுதியில் உள்ள இளநீர் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்த தண்ணீரால் தமிழாக்குறிச்சி அணையில் திடீர் விரிசல் ஏற்பட்டது.

இப்பகுதியில் இருந்து தண்ணீர் அதிகளவு வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் ஊருக்குள் சென்று விடக்கூடாது என்பதற்காக தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திருப்பி விடப்பட்டது. இருப்பினும் பச்சையாறு அணையில் உள்ள தண்ணீரை தாமிரபரணியில் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறினால் தமிழாக்குறிச்சி, குறவன்குளம், செங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

எனவே ஊருக்குள் தண்ணீர் வந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் பாஜ மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பச்சையாறு தடுப்பணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீரை திறக்க வலியுறுத்தி அணை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தடுப்பணையில் விரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அணை பகுதியில் தண்ணீருக்குள் மூழ்கி அடைப்பை சரிசெய்ய கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து வல்லுநர்கள் குழு வரவழைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அணையில் இருந்து தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள், போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் மாலையில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் முன்னீர்பள்ளம் போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Thidiyur ,Nellai ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...