*குட்டிகளுடன் வலம் வருவதால் மலையோர பகுதி மக்கள் அச்சம்
நாகர்கோவில் : சபரிமலை சீசன் எதிரொலியாக குமரி மாவட்ட வனப்பகுதிக்கு யானைகள் கூட்டம் இடம்பெயர தொடங்கியுள்ளது. குட்டிகளுடன் இந்த யானைகள் வலம் வருவதால் மலையோர பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சபரிமலை மண்டல-மகரவிளக்கு சீசன் தொடங்கியுள்ளது. ஜனவரி 15ம் தேதி வரை பக்தர்கள் சபரிமலைக்கு இரு முடி கட்டுடன் மலையேறி செல்வது வழக்கம். இந்த காலகட்டம் கேரளாவில் உள்ள பெரியார் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் யானைக்கூட்டங்களின் வருடாந்திர இடம்பெயர்வுக்கு ஒரு முக்கிய தூண்டுதலாக அமைகிறது.
யானைகள் பொதுவாக அமைதியை விரும்பும் விலங்கு ஆகும். சபரிமலை சீசனின் போது ஏற்படும் அதிகப்படியான மனித நடமாட்டம், இரைச்சல், ஒலிபெருக்கிகளின் சத்தம் மற்றும் இரவில் எரியும் மின்விளக்குகள் ஆகியவை வனப்பகுதியில் அமைதியைக் குலைக்கின்றன.
சபரிமலை செல்லும் முக்கிய பாதைகள் மற்றும் பம்பை நதிக்கரை ஓரங்கள், பல தலைமுறைகளாக யானைகள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய வலசைப் பாதைகளாக உள்ளன. இந்த வழித்தடங்களில் பக்தர்கள் செல்வதால், யானைகள் வேறு வழியின்றி மாற்றுப் பாதைகளைத் தேடி இடம்பெயர்கின்றன.
கேரள வனப்பகுதிகளில் சீசன் காலத்தில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, யானைகளால் சுதந்திரமாக உணவு தேடவோ, தண்ணீர் அருந்தவோ முடிவதில்லை.
இதனால், உணவு மற்றும் தண்ணீரைத் தேடி தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு வருகின்றன. தென்மேற்கு பருவமழைக்குப் பிந்தைய வறட்சி காலங்களில், பசுமையான தீவனம் மற்றும் நீர் கிடைக்கும் இடங்களை நோக்கி யானைகள் நகர்கின்றன.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகள் ஈரமான பசுமை மாறாக் காடுகளைக் கொண்டிருப்பதால், அவற்றை நோக்கி நகர்கின்றன. கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயரும் யானைக் கூட்டங்கள், பெரும்பாலும் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களான கோவை, ஆனைமலை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், நீலகிரி (கூடலூர், பந்தலூர்), தேனி (மேகமலை) மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் வனப்பகுதிகளுக்குள் நுழைகின்றன.
யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் நுழைவதால், பயிர்ச் சேதம், வீடுகள் சேதம் மற்றும் மனித-யானை மோதல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது. சபரிமலைக்குச் செல்லும் பெருவழிப் பாதையில் சில சமயங்களில் பக்தர்கள் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள இரு மாநில வனத்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். தமிழ்நாடு வனத்துறை, குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி கோட்டங்களில், தங்கள் ஊழியர்களை உஷார்படுத்தியுள்ளது.
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில், யானைகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. சபரிமலை வனப்பகுதியில் உள்ள பக்தர்கள் பயன்படுத்தும் பாதைகளில், யானைகள் கடக்கும் முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு பக்தர்கள் செல்லும்போது வனத்துறையினர் பாதுகாப்பளித்து, யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுகின்றனர்.
சபரிமலை செல்லும் பக்தர்கள் அங்கீகரிக்கப்படாத காட்டுப் பாதைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே குற்றியார் வனப்பகுதியில் 2 நாட்களுக்கு முன் யானைக்கூட்டம் வலம் வருவதாக தகவல் பரவியது.
குற்றியார் அரசு ரப்பர் கழக குடியிருப்பு அருகில் உள்ள கூப்பு எண் 66 பகுதியில் யானை கூட்டம் நிற்பதை அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் பார்த்துள்ளனர்.
அப்போது ஒரு குட்டி யானை, இரண் பெண் யானைகள், ஒரு ஆண் யானை ஆகியன அந்த பகுதியில் வலம் வந்ததை காண முடிந்ததாக மலைவாழ் மக்களும் உறுதி செய்தனர். சபரிமலை சீசன் காரணமாகவே இந்த யானைகள் இடம்பெயர்ந்து குமரி மாவட்ட வனப்பகுதியையொட்டி மலையோர பகுதியில் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்துவதாகவும், இதனை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரப்பர் பால்வெட்டும் தொழிலாளர்கள், மலையோர பகுதி பழங்குடியின மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
புல்லட் ராஜா நடமாட்டமா?
‘புல்லட் ராஜா’ என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்ட காட்டு யானை, தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்தது. வனத்துறையின் ஆவணங்களில் ‘சிடி 16’ எனக் குறிப்பிடப்பட்ட இந்த ஆண் யானை, ஒரு மாதத்திற்கும் மேலாக கூடலூர், பந்தலூர், சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளைச் சேதப்படுத்தி வந்தது. சுமார் 40-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தாக்கி, பயிர்களை நாசம் செய்ததால், பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.
வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தியதால், இந்த யானையைப் பிடிக்கக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.இதையடுத்து, தமிழக வனத்துறை உயர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று, கும்கி யானைகளின் உதவியுடன் ‘புல்லட் ராஜா’ வுக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். டிசம்பர் 2024-ல் பிடிக்கப்பட்ட யானை, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (டாப்ஸ்லிப்) வரகளியாறு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
முகாமில் சில வாரங்கள் பராமரிக்கப்பட்ட பிறகு, கடந்த ஜனவரி மாதம், இந்த யானை திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த அப்பர் கோதையாறு வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. தற்போது, ஜிபிஎஸ் கருவி மூலம் வனத்துறையினர் அந்த யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த யானைதான் குமரி மாவட்ட வனப்பகுதியில் அட்டகாசம் செய்வதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. அதே வேளையில் ‘அரிக்கொம்பன்’ மற்றும் ‘ராதாகிருஷ்ணன்’ போன்ற பிற பிடிபட்ட யானைகளும் இதே வனப்பகுதியில் தான் விடுவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. படங்கள்/ மணிகுற்றியார் அரசு ரப்பர் கழக குடியிருப்பு அருகில் உள்ள வனப்பகுதியில் குட்டியுடன் வலம் வரும் யானை கூட்டம்.
