- மல்லாபுரம் - மயிலாடும்பாறை சாலை
- மதுரை
- வனத்துறை?: பொது
- மல்லாபுரம்
- பேரையூர் தாலுகா
- Kadamalai
- தேனி மாவட்டம்
*விரைவில் நிதி கிடைக்கும் என தகவல்
மதுரை : மல்லப்புரம் – மயிலாடும்பாறை சாலையை சீரமைக்க வனத்துறை தயாரித்த திட்ட அறிக்கைக்கு, விரைவில் நிதி கிடைக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது. பேரையூர் தாலுகா மல்லபுரத்திலிருந்து, தேனி மாவட்டம் கடமலை – மயிலலை ஒன்றியத்தை இணைக்கும் விதமாக, 1956ல் சுமார், 18 அடி அகலத்தில் மலைவழிச்சாலை அமைக்கப்பட்டது.
காலப்போக்கில் சாலையின் அகலம் குறுகி 12 அடியானது. 1991ல் மலையிலிருந்து வரும் சிற்றோடைகளுக்காக ஆங்காங்கே சிறு பாலங்கள் கட்டப்பட்டது. பின்னர் அந்த சாலை சேதமடைந்தால் மட்டும், ஒட்டுப்போடும் பணிகள் நடக்கின்றன. இச்சாலை 1956ம் ஆண்டிலேயே, 3 கி.மீ தூரத்திற்கு தார்சாலை, மீதமுள்ள பகுதி சிமென்ட் சாலையாக அமைக்கப்பட்டது.
தற்போது, இச்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே அதனை விரிவாக்கம் செய்து சீரமைக்க வேண்டுமென இரு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், சாலை விரிவாக்கம் திட்டம் கைவிடப்பட்டு, சீரமைக்கும் பணிக்கு மட்டும் நிதி கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மல்லப்புரம் – மயிலாடும்பாறை சாலையை சீரமைக்க ரூ.3 கோடி திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு, விரைவில் நிதி கிடைக்க வாய்ப்புள்ளது.
அதேநேரம், சம்பந்தப்பட்ட சாலை சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் அமைந்துள்ள வனப்பகுதியாக இருப்பதால், அதை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளிக்க வேண்டும். எனவே, தற்போதைய நிலையில் சாலை விரிவாக்கம் நடைபெறாது. இவ்வாறு கூறினர்.
மல்லப்புரத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார் (41) கூறியதாவது: பேரையூர் மற்றும் தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஒன்றியங்களில் இலவம் பஞ்சு, முந்திரி, தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிகம் விளைகின்றன.
விவசாயிகள் உசிலம்பட்டியிலிருந்து ஆண்டிப்பட்டி வழியாக மயிலாடும்பாறைக்கு செல்ல 58 கி.மீ பயணிக்க வேண்டும். இந்த சாலையில் சென்றால் அந்த தூரம் 45 கி.மீ ஆக குறையும். ஆண்டிப்பட்டி வழியாக பேரையூர் செல்ல சுமார் 85 கி.மீ பயணிக்க வேண்டும். மாறாக மள்ளப்புரம் வழியாக சென்றால் 43 கி.மீ தூரம் மட்டுமே.
இதன் மூலம், 42 கி.மீ தூர பயணத்திற்கான எரிபொருள் செலவு மற்றும் பயண நேரம் சேமிக்கப்படும். இதனால் மட்டுமே இந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம்.
தேனி மாவட்டத்தில், தும்மக்குண்டு, வாலிபாறை, வருசநாடு, முருக்கோடை, கோம்பைதொழு, வெள்ளிமலை, அரசரடி ஆகிய பகுதிகளிலும், மதுரை மாவட்டத்தில் அழகர்மலை வனப்பகுதியிலும், சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மல்லப்புரம் – மயிலாடும்பாறை சாலையை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். இச்சாலையை 20 அடி வரை விரிவாக்கம் செய்தால் எங்களுக்கு குந்த பலன் அளிக்கும். இவ்வாறு கூறினார்.
களைகள் அகற்றும் பணி தீவிரம்
தமிழகத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களை மதுரை மற்றும் தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள சுமார் 124 கி.மீ தூரம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி அலகின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இச்சாலையில் உள்ள பாலங்கள் மற்றும் சிறுபாலங்களின் உறுதித் தன்மையை பாதுகாக்கும் விதமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அவற்றில் முளைத்துள்ள செடிகள் மற்றும் மரக்கிளை அகற்றும் பணிகள், சென்டர் மீடியன்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறும்.
இதன்படி, தற்போது சென்டர் மீடியன்களை ஆக்கிரமித்துள்ள களைகள் சாலையை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி ஒத்தக்கடை பைபாஸ் சாலையிலிருந்து தும்பைப்பட்டி வரை முதற்கட்டமாக சென்டர் மீடியன்களில் உள்ள செவ்வரளி செடிகளை பாதுகாக்கும் விதமாக, களைகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
