நாகை: வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியிருந்தது. நாகையில் புயல் அறிவிப்புக்கு முன்னதாக ஆழ்கடல் தொழிலுக்குச் சென்ற பெரும்பாலான விசைப் படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருக்கு சொந்தமான 2 விசைப் படகுகள் மற்றும் அதில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என மாவட்ட மீன்வளத்துறை தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நாகை மீனவர்கள் மல்லிப்பட்டினத்தில் கரை திரும்பினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலில் கடுமையான கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்கள் திசை மாறி சென்று இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிட்வா புயல் காரணமாக நாகையில் கடல், கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. சென்னைக்கு 540 கி.மீ தூரத்தில் தெற்கு திசையில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.
