- தஞ்சாவூர்
- புன்னியாமூர்த்தி
- தஞ்சாவூர் மாவட்டம்
- பாபனாசம் தலுகா மலக்குடி
- முன்னாள்
- ஜனாதிபதி
- பிரபுக்களின் வீடு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் ஆனதால் காதலன் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மேலகளக்குடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர். இவரது மகள் காவியா(26). ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அதே ஊரை சேர்ந்த கருணாநிதி மகன் அஜித்குமார்(29). பெயின்டரான இவரும், காவியாவும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதிலும் இவர்களின் காதல் காவியாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவருக்கும், மாமா பையனுக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்து கடந்த 23ம்தேதி நிச்சயதார்த்தம் செய்தனர்.
இந்த விவரத்தை காவியா, காதலன் அஜித்குமாரிடம் தெரிவிக்காமல் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதேபோல் நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு இருவரும் செல்போனில் வீடியோகாலில் பேசியபோது தனக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட தகவலை கூறியதுடன், அதற்கான போட்டோ மற்றும் வீடியோவை காவியா அனுப்பி உள்ளார். இதைபார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அஜித்குமார், காவியா மீது கோபத்தில் இருந்து உள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை காவியா பள்ளிக்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தார். மாரியம்மன் கோயில் கொத்தட்டை காலனி ராமகிருஷ்ண மடம் அருகே ஸ்கூட்டியை அஜித்குமார் வழிமறித்து, நிச்சயதார்த்தம் நடந்தது பற்றி ஏன் கூறவில்லை. என்னை மறந்து விட்டு வேறு ஒருவருடன் உனக்கு திருமணம் நடக்க போகிறதா என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார், மறைத்து வைத்திருந்த கத்தியால் காவியாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரி குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் சாய்ந்த காவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் அஜித்குமார், அம்மாபேட்டை காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காவியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர். பட்டப்பகலில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
