- சென்னை
- மாவட்ட தேர்தல் அதிகாரி
- குமரகுருபரன்
- நகராட்சி ஆணையர்
- ஜே.குமரகுருபரன்
- சென்னை மாவட்டத் தேர்தல் அலுவலர்
சென்னை: கணக்கீட்டு படிவங்களை டிசம்பர் 4ம் தேதிக்குள் திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறும் என சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணி கடந்த 4ம்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கி திரும்ப பெறும் பணியை டிசம்பர் 4ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில், வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையிலும், வாக்காளர்கள் இறுதி நாளான டிசம்பர் 4ம் தேதி வரை காத்திருக்காமல் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களைப் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் விரைந்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். எனவே, வாக்காளர்கள் தங்களுக்கான கணக்கீட்டு படிவத்தை உடனடியாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
கடந்த 4ம் தேதி எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணி தொடங்கியது. டிசம்பவர் 4ம் தேதி வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கணக்கீட்டு படிவத்தை நிரப்புவதில் சிரமம் காரணமாக, இதுவரை 40 சதவீதம் பேர் மட்டுமே சென்னையில் திரும்ப அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பெரும்பாலான வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை திரும்ப ஒப்படைப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
* உறவினர் பெயர் கட்டாயமில்லை
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் 6.41 கோடி வாக்காளர்களில் 6.23 கோடி வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, டிசம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு வடிவங்களை பூர்த்தி செய்து (எஸ்ஐஆர்) ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினர் பெயரை கண்டறிய இயலாத நிலையில் டிசம்பர் 4ம் தேதிக்குள் பிற விவரங்களை நிரப்பப்பட்ட எஸ்ஐஆர் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அவர்களின் வாக்காளரின் பெயர் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலின்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* உதவி எண் 1913ல் அழைக்கலாம்
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து பெறவில்லை எனில் 1913 என்ற உதவி எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியை சென்னை மாவட்டத்தில் நிறைவேற்றுவதற்கு வாக்காளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
