×

3 ஆண்டுகளில் 150 செயற்கைக்கோள் செலுத்த திட்டம்; விண்வெளி மையம் அமைக்க முதற்கட்ட பணிக்கு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: விண்வெளி மையம் அமைக்க முதற்கட்ட பணிக்கான ஒப்புதலை இந்திய அரசு வழங்கி உள்ளது என கூறிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இன்னும் 3 ஆண்டுகளில் 150 செயற்கைக்கோள்கள் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக கூறினார். இஸ்ரோ தலைவர் நாராயணன், நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விண்வெணி துறையில் 2040ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக, இஸ்ரோவின் திட்டங்கள் இருக்கும். மகேந்திரிகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்துக்கு, ஒன்றிய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

விண்வெளி துறையில் தனியார் என்பது வரவேற்க கூடியதாகும். தற்போது விண்ணில் நாம் 57 செயற்கை கோள்கள் செலுத்தி உள்ளோம். இன்னும் 3 ஆண்டுகளில் மூன்று மடங்கு எண்ணிக்கையை அதிகரித்து 150 செயற்கைக் கோள்கள் செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன. அதாவது வருடத்துக்கு 50 செயற்கைக்கோள்கள் வீதம், 3 ஆண்டுகளில் 150 செயற்கை கோள்கள் செலுத்தப்படும். அரசு மட்டும் இதை செய்ய முடியாது. தனியார் பங்களிப்பும் இருக்க வேண்டும். முழுக்க, முழுக்க அவர்கள் இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் தான், இந்த திட்டத்தை செய்வார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை இஸ்ரோ தான் செய்யும்.

2027க்குள் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் உள்ளது. இந்தியர்களுக்காக 2035ல் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முதல் கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது. மொத்தம் 52 டன் எடை உள்ள இந்த விண்வெளி நிலையம் 5 கட்டங்களாக அமைக்கப்படும். முதல் கட்டம் 2028ல் அனுப்பப்படும். சந்திரயான் 4 மற்றும் சந்திரயான் 5 ஆகிய திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சந்திரயான் 5 திட்டம் ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. 2040ல் இந்தியாவின் ராக்கெட் மூலம் சந்திரனுக்கு ஆட்களை அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நமது ராக்கெட் மூலம் அமெரிக்க செயற்கைகோள்
‘நாசாவுடன் இணைந்து நிறைய திட்டம் உள்ளது. அமெரிக்காவின் 6000 கிலோ எடை உள்ள தகவல் தொலை தொடர்பு செயற்கை கோளை வணிக ரீதியாக நமது ராக்கெட்டில் இருந்து செலுத்த இருக்கிறோம். டிசம்பரில் இது அனுப்பி வைக்கப்படும். இதற்கான தேதி முடிவாக வில்லை. சுபான்ஷூ சுக்லா நாசாவின் உதவியுடன் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார். அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டு முயற்சியில் சென்றார்’ என்று நாராயணன் கூறினார்.

பேரிடர்களை துல்லியமாக அறிய ரூ.10,000 கோடியில் நிசார் செயற்கை கோள்
நிசார் செயற்கை கோளை இந்தியாவும், நாசாவும் இணைந்து அனுப்பி உள்ளது. இதற்காக நாசா ரூ.10,300 கோடி செலவிட்டுள்ளது. இதன் மூலம் பூமியின் வளங்களையும், நில நடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களையும் துல்லியமாக அறிய முடியும். மழை, மேகமூட்டம் போன்ற எந்த தட்ப வெப்ப நிலையிலும் படங்களை எடுக்க கூடிய திறன் கொண்டவை ஆகும்’ என்று நாராயணன் தெரிவித்தனர்.

Tags : ISRO ,president ,Narayanan ,Nagarko ,Indian government ,Narayan ,Nagarkov ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...