சென்னை: குமரிக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோரப் பகுதியை நெருங்குவதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் -இலங்கைப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு வ ங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை- இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இது வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக மேற்கண்ட திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடலில் வட தமிழகம்-புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
இது தவிர மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நேற்று முன்தினம் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலை கொண்டது. பின்னர் அது புயலாக(சென்யார் புயல்) வலுப்பெற்று மலாக்கா மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு இந்தோனேசிய பகுதியில் நிலை கொண்டது. பின்னர் மேற்கு- தென்மேற்கு திசையில் நகர்ந்து நேற்று இந்தோனேசிய கடற்கரைப்பகுதியை கரை
கடந்தது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மற்றும் சென்யார் புயலின் பகுதி ஆகியவை தமிழகத்துக்கு நெருங்கி வரும் காரணத்தால் இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 29ம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
வட மாவட்டங்களை பொருத்தவரையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 30ம் தேதியும் நீடிக்கும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இதையடுத்து, தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும். 28, 29ம் தேதிகளில் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்
படுகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழகத்தில் 28, 29ம் தேதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் வருகிற 28, 29ம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் வரும் 29ம் தேதி அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகனமழை பெய்யும் என்ற ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர், மாநில பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும், கனமழை பெய்யும் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
