அவனியாபுரம்: சென்னையில் இருந்து மதுரை வந்த விசிக தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: எஸ்ஐஆர் பணிகள் 15 மாநிலங்களில் நடைபெறுகிறது. இது வாக்காளர் பட்டியல் சீராய்வாக இல்லாமல், இந்திய குடியுரிமையை சீராய்வு செய்யும் புதிய நடைமுறையாக உள்ளது. தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, பாஜ ஒவ்வொருவரின் குடியுரிமையை சோதனைக்கு உள்ளாக்குகிறது. இதனால் மக்களை நாடற்றவர்களாக்கும் கொடுமை நடைபெறும். எனவே, எஸ்ஐஆர் நடைமுறை கூடாது. வழக்கமான வாக்காளர் சீராய்வு பணியை ஏற்கிறோம். அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு, நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது.
அதிமுகவில் இருந்து அவர் வெளியேறும் நிலை ஏற்பட்டிருப்பது, அந்த கட்சிக்கான பின்னடைவாகும். அவர் தனிப்பட்ட முறையில் இந்த முடிவை எடுத்திருந்தால், எந்த கருத்தும் சொல்லத் தேவையில்லை. ஆனால், இதன் பின்னணியில் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றின் கைகளும் நீண்டிருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அவரை பாஜவினர் சந்தித்து அழைத்ததாக வாக்குமூலம் கொடுத்திருந்தார். எனவே, அதிமுகவை பலவீனப்படுத்தும் சதித்திட்டத்தை பாஜ செயல்படுத்துகிறது. இது அதிமுகவுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் நல்லதல்ல. இதன் தீவிரம் குறித்து, அதிமுக தலைமை சிந்திக்கும் என நம்புகிறேன். ஆளுநர் திரும்பத் திரும்ப தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், திராவிட அரசியலுக்கு எதிராகவும் பேசி வருகிறார். இவ்வாறு கூறினார்.
