பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் 12 பெண் நக்சல்கள் உட்பட மொத்தம் 41 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்துள்ளனர். அரசின் புதிய சரண் அடைதல் மற்றும் மறுவாழ்வு கொள்கை மற்றும் சமூக மறுசீரமைப்புக்கான மறுவாழ்வு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டதாக கூறி மூத்த காவல்துறை அதிகாரியின் முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து இவர்கள் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 32பேரின் தலைக்கு மொத்தம் ரூ.1.19 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்களில் 39 பேர் தெற்கு துணை மண்டல மாவோயிஸ்ட் குழுவை சேர்ந்தவர்கள். சரணடைந்த நக்சல்கள் மறுவாழ்வுக்காக ஒவ்வொருவருக்கும் ரூ.50ஆயிரம் உடனடி நிதியுதவி வழங்கப்பட்டது. சரணடைந்த 41 பேருடன் சேர்த்து கடந்த 2024ம் ஆண்டு முதல் மொத்தம் 790 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். 202 நக்சல்கள் கொல்லப்பட்டனர். 1031 பேர் கைது செய்யப்பட்டனர்.
