திருவனந்தபுரம்: ஆன்லைன், உடனடி முன்பதிவு பாஸ் இல்லாமல் வரும் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக கடந்த 16ம் தேதி மாலை நடை திறந்த அன்று முதல் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனத்திற்கு வருகின்றனர். இந்த மண்டல காலத்தில் நேற்று வரை தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 9.75 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில் பக்தர்களை கட்டுப்படுத்துவதற்காக தேவசம் போர்டு கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் அல்லது உடனடி முன்பதிவு கட்டாயமாகும். இவை இரண்டும் இல்லாத பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். உடனடி முன்பதிவு முடிந்துவிட்டால் மீண்டும் அடுத்த நாள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல முடியும். மறுநாள் தரிசனத்திற்கு செல்லும் வரை பக்தர்கள் தங்குவதற்கும், உணவு உள்பட வசதிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்றும் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. காலையில் நடை திறந்தபோது பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பகலில் கூட்டம் குறைந்த போதிலும் மாலையில் மீண்டும் பக்தர்கள் வருகை அதிகரித்தது. புல்மேடு வனப்பாதை வழியாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. நேற்றும் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தரிசனம் செய்தனர்.
* அரசு பஸ்சில் பம்பை செல்ல முடியாது
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அல்லது உடனடி முன்பதிவு கட்டாயமாகும். இந்த மண்டல கால தொடக்கத்தில் பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார் மற்றும் செங்கணூர் ஆகிய 5 இடங்களில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்பட்டு வந்தன. இதில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து பம்பை, எருமேலி மற்றும் செங்கணூர் ஆகிய இடங்களில் இருந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டுள்ளன. சபரிமலைக்கு கார், வேன் உள்பட தனியார் வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிலக்கல்லில் நிறுத்தி பின்னர் கேரள அரசு பஸ்சில் பம்பை செல்ல வேண்டும். ஆனால் வெளியூர்களில் இருந்து வரும் கேரள அரசு பஸ்களில் பயணம் செய்யும் பக்தர்கள் நேராக பம்பை சென்று விடலாம். தற்போது பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டு விட்டதால் இந்த பஸ்களில் வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு நேரடியாக பம்பை செல்ல முடியாது. நிலக்கல்லிலேயே இறக்கி விடப்படுகின்றனர். இங்குள்ள உடனடி முன்பதிவு கவுண்டர்களில் பாஸ் வாங்கிய பின்னர் மட்டுமே பம்பை செல்ல முடியும்.
