ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடந்த 2023ஆம் ஆண்டு முதல் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 வாரங்களாக இம்ரான்கானை சந்திக்க, அவரது சகோதரிகள் மற்றும் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி நிர்வாகிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இம்ரான்கான் சிறையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் பாகிஸ்தான் முழுவதும் பரவியது. இந்த நிலையில் இம்ரான்கானின் சகோதரிகள் நோரீன் கான், அலீமா கான், உஸ்மா கான் ஆகியோர் நேற்று அடியாலா சிறைக்கு வெளியே அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து ஏராளமான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
