புதுடெல்லி: ‘காலனித்துவ மனப்பான்மையை ஒழித்து, தேசியவாத சிந்தனையை ஏற்றுக் கொள்ள வழிகாட்டும் ஆவணமாக அரசியலமைப்பு இருக்கிறது’ என அரசியலமைப்பு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். நாட்டின் அரசியலமைப்பு சட்ட தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சம்விதான் சதன் என அழைக்கப்படும் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய அரங்கில் அரசியலமைப்பு தின விழா ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடந்தது. இதில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மற்றும் பல்வேறு ஒன்றிய அமைச்சர்கள் எம்பிக்கள் பங்கேற்றனர்.
விழாவில், அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்த ஜனாதிபதி முர்மு, தமிழ், மலையாளம், மராத்தி, நேபாளி, பஞ்சாபி, போடோ, காஷ்மீரி, தெலுங்கு, ஒடியா மற்றும் அஸ்ஸாமி ஆகிய 9 மொழிகளில் அரசியலமைப்பு சட்டத்தின் டிஜிட்டல் பதிவை வெளியிட்டு பேசினார். அவர் ஆற்றிய உரையில் கூறியதாவது: நமது அரசியலமைப்பு சட்டம் தேசத்தின் பெருமைக்கான ஆவணம். இது நாட்டின் அடையாளத்தின் ஆவணம். காலனித்துவ மனநிலையை ஒழித்து, தேசியவாத சிந்தனையை ஏற்றுக் கொண்டு நாட்டை முன்னோக்கி வழிநடத்தி செல்வதற்கான ஆவணம். அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தனிப்பட்ட, ஜனநாயக உரிமைகள் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். எனவே தொலைநோக்கு பார்வையுடன் கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற பல குறிப்பிடத்தக்க சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
காலனித்துவ கால இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் நீக்கப்பட்டு புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புக்கு இடையூறாக இருந்த தடை அகற்றப்பட்டது. முத்தலாக் தடை, ஜிஎஸ்டி அமல் ஆகியவை முறையே பெண்கள் மற்றும் நிதியில் அதிகாரமளிப்பதற்கான இரு மிக முக்கியமான நடவடிக்கைகள். நமது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக மிக வேகமாக முன்னேறி வருகிறது. 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். பெண்கள், இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் நமது ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பேசுகையில், ‘‘வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே எங்கள் கூட்டு இலக்கு. அதற்கு, அரசியலமைப்பின் மதிப்புகள், லட்சியங்களை நாம் அனைவரும் பின்பற்றுவோம் என்ற உறுதியை வலுப்படுத்துவோம். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் தேசிய நலனை முதன்மையாகக் கொண்டிருக்கும். நமது கடமைகள், பொறுப்புகளை நிறைவேற்றுவதன் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு வளர்ச்சி, நீதி, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் மனித கண்ணியத்திற்கு எடுத்துக்காட்டான சிறந்த இந்தியாவை உருவாக்குவோம்’’ என்றார்.
* உச்ச நீதிமன்றத்தில் கொண்டாட்டம்
உச்ச நீதிமன்றத்தில் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் அரசியலமைப்பு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பூடான் நாட்டின் தலைமை நீதிபதி நோர்பு டிஷெரிங், கென்யா தலைமை நீதிபதி மார்தா கோமீ, மொரிசியஸ் தலைமை நீதிபதி ரெஹனா பிபி முங்லி குல்புல், இலங்கை தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேனா மற்றும் கென்யா, நேபாளம், மலேசியா உள்ளிட்ட நாடுகளின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் பங்கேற்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
* தமிழில் உரையாற்றிய துணை ஜனாதிபதி
அரசியலமைப்பு விழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவரான துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், தனது பேச்சைத் தாய்மொழியான தமிழில் தொடங்கிப் பேசினார். அவர் பேசுகையில், ‘‘நமது தேசத்தின் ஆன்மாவாக அரசிலயமைப்பு சட்டம் திகழ்கிறது. அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்ற மாபெரும் தலைவர்கள் ஒவ்வொரு பக்கத்திலும் நாட்டின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர். இது கோடிக்கணக்கான மக்களின் கனவு மற்றும் தியாகத்தின் அடையாளம். சோழ ஆட்சியாளர்கள் தெற்கில் குடவோலை முறையை ஏற்றுக்கொண்டபோது, வடக்கில் வைஷாலி போன்ற இடங்களில் ஜனநாயகம் இருந்ததை வரலாறு கூறுகிறது. எனவே, ஜனநாயகம் இந்தியாவிற்கு புதிய கருத்து அல்ல. அதனால்தான் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கிறோம்.
மக்களின் பங்களிப்புகள் இல்லாமல் எந்த ஜனநாயகமும் வாழ முடியாது. நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவையாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி அமைப்புகளாக இருந்தாலும் சரி, மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்ற உரையாடல், விவாதம் மற்றும் கலந்துரையாடல் மேற்கொள்வது நமது முதன்மையான கடமை. அந்த கடமை உணர்வுடன் நாம் நமது பாத்திரங்களைச் செய்ய வேண்டும். நமது அரசியலமைப்பின் ஆன்மா இந்தியா ஒன்று என்றும், அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் நிரூபித்துள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். உலகளவில் மாறிவரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் சூழ்நிலையில், தேர்தல் சீர்திருத்தங்கள், நீதித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் நிதி சீர்திருத்தங்கள் மிகவும் அவசியம்’’ என்றார்.
