திண்டுக்கல், நவ. 26: ஆத்தூர் அணை ஒரே நாள் மழையில் 3 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன் தெரிவித்தார். திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமாக ஆத்தூர் அணை உள்ளது. ஆத்தூர் அணையில் நீர் நிரம்பினால் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது, ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. ஆத்தூர் அணை 23.5 அடி கொள்ளளவு கொண்டது.
அணையில் நீர் நிரம்பி மறுகால் பாய்ந்து திண்டுக்கல், வேடசந்தூர் தொகுதி மற்றும் கரூர் மாவட்டத்தின் சில விவசாய நிலங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. ஆனால் கடந்த வருடம் 2024ல் அக்டோபர் இறுதிக்குள் 4 முறை அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால் தற்போது 23.5 அடி உயரம் கொண்ட அணை கடந்த 23ம் தேதி வரை 11 அடி மட்டுமே நீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் பெய்த மழையின் காரணமாக ஒரே நாளில் 3 அடி அதிகரித்து 14 அடி நிரம்பியுள்ளது.தொடர்ந்து இதே நிலை நீடித்தால் காமராஜர் அணை முழு 23.5 அடி நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
இதுகுறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூறியதாவது: ஆத்தூர் அணையில் நேற்று முன்தினம் ஒரு நாள் பெய்த மழையினால் 3 அடி நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். இதனால் அணை முழு கொள்ளளவை எட்டும். எனவே திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்தார்.
