×

கப்பல் கட்டும் துறையில் இந்தியா உலகளாவிய மையமாக மாறும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை

புதுடெல்லி: இந்தியா கப்பல் கட்டும் துறையில் உலகளாவிய மையமாக மாறும் ஆற்றலை பெற்றுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவின் கப்பல் கட்டும் தளங்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் நடந்த சமுத்ரா உத்கர்ஷ் என்ற கருத்தரங்கில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,
‘‘ திட்ட வடிவமைப்பு, கட்டுமானம் முதல் வெளிப்புற அலங்காரம் செய்தல், புதுப்பித்தல், பழுதுபார்த்தல் மற்றும் முழு உருவாக்க சுழற்சி ஆதரவு என கப்பல் கட்டும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டமும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றது. இந்திய கப்பல் கட்டும் தளங்கள் ஏற்கனவே விமானம் தாங்கிகள், ஆராய்ச்சிக் கப்பல்கள் மற்றும் வணிக கப்பல்களை உற்பத்தி செய்து வழங்குவதில் சிறப்பாக உள்ளன.

இந்த ஒருங்கிணைந்த திறன் வரும் பத்தாண்டுகளில் கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு மற்றும் கடல்சார் கண்டுபிடிப்புக்களுக்கான உலகளாவிய மையமாக மாறும் ஆற்றலை இந்தியா கொண்டுள்ளது. கப்பல்களை மட்டுமல்ல நம்பிக்கையையும் தளங்களை மட்டுமல்ல கூட்டாண்மைகளையும் உருவாக்குவதன் மூலம் கடல்சார் நூற்றாண்டை வடிவமைக்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

Tags : India ,Minister ,Rajnath Singh ,New Delhi ,Defence Minister ,Samudra Utkarsh ,
× RELATED கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி...