×

முதல்வர் அதிகாரம் குறித்து யாரும் பேசவில்லை; கட்சிக்கும் ஆட்சிக்கும் சித்தராமையா பெரிய சொத்து: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் புகழாரம்

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரிய சொத்து, அவருக்கு என்ன கவுரவம் கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்துள்ளோம் என்று துணை முதல்வரும் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் தெரிவித்தார். இது குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘எங்கள் கட்சி ஆட்சியில் தலைமை மாற்றம் ஏற்படும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு பெற ரூ.50 முதல் 100 கோடி வரை குதிரை பேரம் பேசி வருவதாக பாஜ தலைவர்கள் கூறி வருகிறார்கள். ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் குதிரை பேரம் கலாச்சாரத்தை தொடங்கி வைத்தது பாஜ தான்.

காங்கிரஸ் கட்சிக்கு அந்த நிலை அவசியமில்லை. நாங்கள் கட்சி தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் ஏற்று கொள்வதாக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதை வேதவாக்காக ஏற்றுகொள்வேன். முதல்வர் பதவி மாற்றம் அல்லது காலக்கெடு குறித்து யாரும் பேசவில்லை. முதல்வர் சித்தராமையா கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரிய சொத்து. அவருக்கு கொடுக்க வேண்டிய அனைத்து கவுரவம் கொடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் கொடுக்கப்படும்.

ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ளதால், அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது. இது வரை அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காதவர்கள், அமைச்சரவை புனரமைப்பு செய்யும்போது, தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். கட்சி தலைமையிடம் பதவி வழங்கும்படி கேட்பதற்கு உரிமை உள்ளது. அதற்காக டெல்லி சென்றுள்ள எம்எல்ஏக்களை கேள்வி கேட்க முடியுமா?’ என்றார்.

Tags : Sidharamaya ,Karnataka ,T. K. Sivakumar ,Bangalore ,Sidharamaya Party ,D. K. Shivakumar ,Bengaluru ,
× RELATED மொத்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜ...