×

இரண்டாவது டெஸ்டில் தெ.ஆப்ரிக்கா அமர்க்களம்: தோல்விப் பிடியில் சிக்கிய இந்தியா

கவுகாத்தி: தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாளில், இந்திய அணி மிக மோசமாக ஆடி, தோல்வியின் விளிம்பில் திணறி வருகிறது. டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடிய அந்த அணி, இந்தியாவை வென்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி, கவுகாத்தியில் கடந்த 22ம் தேதி துவங்கியது. முதலில் ஆடிய தென் ஆப்ரிக்கா அணியின் செனுரன் முத்துசாமி, அட்டகாசமாக ஆடி சதம் விளாசியதால், அந்த அணி 489 ரன் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் சொதப்பலாக ஆடி 201 ரன்னுக்கு சுருண்டது. அதையடுத்து, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 2ம் இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்கா, விக்கெட் இழப்பின்றி 26 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 4ம் நாளான நேற்று 2ம் இன்னிங்சை தொடர்ந்த தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணி பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் பொறுப்புடன் நேர்த்தியாக ஆடி 94 ரன் குவித்து அவுட்டானார். டோனி டி ஜோர்ஸி 49, வியான் முல்டர் ஆட்டமிழக்காமல் 35 ரன் எடுத்தனர்.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். அந்நிலையில், 5 விக்கெட் இழப்புக்கு 260 ரன்னுடன் தென் ஆப்ரிக்கா டிக்ளேர் செய்து, இமாலய வெற்றி இலக்காக 549 ரன்னை நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து, கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் தவித்த இந்திய அணியின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்னிலும், கே.எல்.ராகுல் 6 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நோகடித்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா 15.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. இன்னும் 522 ரன்கள் பின் தங்கியுள்ள இந்தியா, கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில் தோல்வியை தவிர்க்குமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

Tags : South Africa ,India ,Guwahati ,cricket team ,Demba Bawuma ,
× RELATED லக்னோவில் கடும் பனிமூட்டம் காரணமாக...